2015-11-17 16:22:00

இந்தோனேசிய சமயத் தலைவர்கள் பல்சமய உரையாடலுக்கு உறுதி


நவ.17,2015. ஐ.நா.வின் புதிய வளர்ச்சித் திட்ட இலக்குகளை நிறைவேற்றுவதற்கு உதவும் நோக்கத்தில் இந்தோனேசியாவின் ஆறு முக்கிய மதங்களின் தலைவர்கள், பல்சமய உரையாடலை மேம்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளனர்.

ஐ.நா.வின் 193 உறுப்பு நாடுகள், 2030ம் ஆண்டுக்குள் 17 புதிய வளர்ச்சித் திட்ட இலக்குகளை நிறைவேற்றுவதற்கு கடந்த செப்டம்பரில் இசைவு தெரிவித்தன. இரண்டாயிரமாம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட எட்டு மில்லேன்ய வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டிய காலக்கெடு 2015ம் ஆண்டில் முடியவுள்ளவேளை, ஐ.நா.வின் புதிய வளர்ச்சித் திட்ட இலக்குகள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஜகார்த்தாவில் இடம்பெற்ற பல்சமயக் கூட்டத்தில் பேசிய, கலாச்சாரங்கள் மத்தியில் உரையாடல் மற்றும் ஒத்துழைப்பு மையத் தலைவர் Din Syamsuddin அவர்கள், ஐ.நா.வின் 17 புதிய வளர்ச்சித் திட்ட இலக்குகளும் மதத்தோடு தொடர்புடையவை என்றும், இவற்றை நிறைவேற்றுவதற்கு மதங்களின் தலைவர்களுக்கு, கடமைகளும் பொறுப்பும் உள்ளன என்றும் கூறினார்.

மேலும் இக்கூட்டத்தில் உரையாற்றிய, இந்தோனேசிய ஆயர் பேரவையின் கிறிஸ்தவ ஒன்றிப்பு ஆணைக்குழுச் செயலர் Agustinus Ulahayanan அவர்கள், பல்சமய உரையாடல் பற்றி மக்களுக்குக் கற்றுக்கொடுக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

இந்தோனேசியாவில், இஸ்லாம், புத்தம், கத்தோலிக்கம், கன்ஃபூஷியம், இந்து, பிரிந்த கிறிஸ்தவ சபை ஆகிய ஆறு மதங்கள் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. 

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.