2015-11-16 15:35:00

ராசிபலனை வாசிக்க விரும்பும்போது இயேசுவை நோக்குங்கள்


நவ.16,2015. இஞ்ஞாயிறு நண்பகலில் வத்திக்கான் வளாகத்தில் கூடியிருந்த ஏறக்குறைய அறுபதாயிரம் விசுவாசிகளுக்கு, உலக முடிவு பற்றிக் கூறும் இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தை மையமாக வைத்து மூவேளை செப உரை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உலக முடிவு பற்றிய அறிவிப்புகளில் போர்கள், பஞ்சம், பேரிடர்கள், கதிரவனும், நிலாவும் இருளடையும் போன்ற அடையாளங்கள் கூறப்பட்டுள்ளன, ஆயினும், இயேசுவின் மரணம், உயிர்ப்பு மற்றும் உலக முடிவு நாளில் அவர் திரும்பி வருவது ஆகியவையே முக்கிய செய்தி என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நமது அறுதி இலக்கு உயிர்த்த இயேசுவைச் சந்திப்பதாகும், நேரத்திற்காகவோ காலத்திற்காகவோ நாம் காத்திருக்க அவசியமில்லை, இயேசு என்ற மனிதரை நோக்கி நாம் செல்ல வேண்டும் என்றும், நாம் இன்று எப்படி வாழ வேண்டும், எப்படி செயல்பட வேண்டும் என்பதில் நமது கவனம் இருக்க வேண்டும் என்றும் திருத்தந்தை கூறினார்.

அத்திமரம் இலைகளை உதிர்த்து மீண்டும் தளிர்விடும்போது கோடைகாலம் நெருங்கி வந்துவிட்டது என்பதை அறிந்து கொள்கிறோம் என்று தம் சீடர்களுக்கு விளக்கிய திருத்தந்தை, உலக முடிவு பற்றிய செய்தி, நிகழ்கால வாழ்விலிருந்து நம் கவனத்தைத் திருப்பக் கூடாது என்றும் கூறினார்.

வருங்காலத்தை நம்பிக்கையோடு நாம் நோக்க வேண்டும், இக்கால நிகழ்வுகளுக்கு மத்தியில் நம்பிக்கையோடு வாழ்வது கடினம், எனினும், இது நற்பண்புகளில் சிறியது, ஆனால் உறுதியானது என்றும் கூறினார் திருத்தந்தை.

இன்றைய வாழ்வில், நிகழ்கால வாழ்வில் நாம் கவனம் செலுத்த வேண்டுமென்றும் நம் இறைவன் விரும்புகிறார். உங்களில் எத்தனை பேர் தினமும் உங்கள் ராசிபலனை வாசிக்கிறீர்கள்? என்று விசுவாசிகளிடம் கேட்ட திருத்தந்தை, இப்படி ராசிபலன் பார்க்க நீங்கள் விரும்பும்போது இயேசுவை நோக்குங்கள், அவர் உங்கள் வாழ்வை மேம்படுத்துவார் என்றார்.

இக்காலத்திலும், இயற்கை மற்றும் நன்னெறிப் பேரிடர்களுக்கும், எல்லா வகையான துன்பங்களுக்கும் பற்றாக்குறை கிடையாது. ஆனால் எல்லாம் கடந்து போகும், இறைவன் ஒருவரே, அவரின் வார்த்தைகள் மட்டுமே நிலைத்திருந்து அவை நம் வாழ்வுக்கு வழிகாட்டும் விளக்காக அமையும் என்று திருத்தந்தை கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி 








All the contents on this site are copyrighted ©.