2015-11-16 16:02:00

தீவிரவாதிகள் பிடியிலிருந்து தப்பித்த அருள்பணியாளரின் பேட்டி


நவ.16,2015. தன் வாழ்நாட்களின் எஞ்சிய நாட்களை, கிறிஸ்தவ இஸ்லாம் உரையாடல் முயற்சிகளுக்கு செலவிடப்போவதாக, ISIS தீவிரவாதிகளால் பிடிபட்டு, தப்பித்த அருள் பணியாளர் ஒருவர் கூறினார்.

இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம், ISIS தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட அருள்பணி ஜாக் முராத் (Jacques Mourad) அவர்கள், CNS செய்திக்கு அளித்த பேட்டியில், தான் சிறைப்பட்டிருந்த 84 நாட்கள் அனுபவத்தைப்  பகிர்ந்துகொண்டபோது இவ்வாறு கூறினார்.

சிரியாவின் Qaryatain என்ற ஊரில் உள்ள சிரிய கத்தோலிக்க Mar Elian துறவு மடத்திலிருந்து, Boutros என்ற தியாக்கொன் ஒருவருடன், ஆகஸ்ட் மாதம் கடத்திச் செல்லப்பட்ட அருள்பணி முராத் அவர்கள், செபம் ஒன்றே, குறிப்பாக, செபமாலையே தங்களை இந்த துயர அனுபவத்தின்போது பாதுகாத்தது என்று குறிப்பிட்டார்.

தாங்கள் கசையடி பெற்றதை குறிப்பிட்டுப் பேசிய அருள்பணி முராத் அவர்கள், அதற்கு அடுத்தநாள் ஒரு சில இஸ்லாமியத் தீவிரவாதிகள் தங்களிடம் வருத்தத்தைத் தெரிவித்ததாகவும், அவர்கள் மத்தியிலேயே, இஸ்லாம் குறித்த தெளிவான கருத்துக்கள் இல்லை என்றும் அருள்பணி முராத் அவர்கள் தன் பேட்டியில் குறிப்பிட்டார்.

Mar Elian துறவு மடத்தில் 15 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிந்த அருள்பணி முராத் அவர்கள், கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியருக்கும் இடையே உறவுப் பாலங்கள் கட்டுவதில் முனைப்புடன் செயலாற்றியவர் என்று, அருள்பணி ஜிஹாத் யூசெஃப் (Jihad Youssef) அவர்கள்  Aid to the Church in Need என்ற பிறரன்பு பணி அமைப்பினரிடம் கூறினார். 

ஆதாரம் : CNS / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.