2015-11-16 15:52:00

'ஜிஹாதி ஜான்' கொல்லப்பட்டச் செய்தியைக் கொண்டாடியது தவறு


நவ.16,2015. 'ஜிஹாதி ஜான்' கொல்லப்பட்டதாக வெளியானச்  செய்தியை, அமெரிக்க ஐக்கிய நாட்டில் மக்கள் கொண்டாடியது, தனக்கு ஆழ்ந்த வருத்தத்தைத் தந்தது என்று அமெரிக்க ஐக்கிய நாட்டில் வாழும் ஒரு தாய் கூறியுள்ளார். 

'ஜிஹாதி ஜான்' என்ற மறைமுகப்பெயருடன், இஸ்லாமியத் தீவிரவாதக் கொலைகளை தொலைக்காட்சியில் நிகழ்த்திவந்த முஹம்மது எம்வாசி (Mohammed Emwazi) என்ற இளைஞரால் கொல்லப்பட்டவர்களில் ஒருவரான, ஜேம்ஸ் ஃபோலி (James Foley) என்ற பத்திரிக்கையாளரின் அன்னை, டியான் ஃபோலி (Diane Foley) அவர்கள், ABC என்ற அமெரிக்க தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.

'ஜிஹாதி ஜான்' கொல்லப்பட்டதால், நீதி, எவ்வகையிலும் நிலைநாட்டப்படவில்லை என்பதையும், இந்தக் கொலையைச் செய்வதற்கு, அமெரிக்க ஐக்கிய நாட்டின் சக்தி, பெரும்பாலும், பழிக்குப் பழி என்ற வழிமுறைக்குப் பயன்படுத்தப்பட்டிருப்பது வேதனை தருகிறது என்பதையும் அமெரிக்க மக்கள் உணரவேண்டும் என்று தாய் டியான் ஃபோலி அவர்கள் கூறினார்.

அமெரிக்க ஐக்கிய அரசின் சக்தி, அறிவுத்திறன், பணம் ஆகியவை, ISIS தீவிரவாதிகளின் பிடியிலிருந்து பிணைக் கைதிகளை மீட்பதில் செலவிடப்பட்டிருக்க வேண்டுமே தவிர, சிந்திக்கும் திறனை இழந்துவிட்ட ஓர் இளைஞனைக் கொல்வதற்கு இவ்வளவு தூரம் செலவு செய்யப்பட்டிருக்கக் கூடாது என்று டியான் ஃபோலி அவர்கள் தன் பேட்டியில் வலியுறுத்தினார்.

ISIS தீவிரவாதி 'ஜிஹாதி ஜான்'ஆல் கொல்லப்பட்ட டேவிட் ஹைன்ஸ் (David Haines) என்பவரின் மனைவியும், ஸ்டீவன் சோட்லாஃப் (Steven Sotloff) என்பவரின் குடும்பமும், 'ஜிஹாதி ஜான்' கைது செய்யப்பட்டு, நீதி மன்றத்தில் நிறுத்தப்படுவதையே தாங்கள் எதிர்பார்த்ததாகக் கூறினர்.

ஜேம்ஸ் ஃபோலி அவர்கள் பெயரால்  இயங்கிவரும் ஓர் அறக்கட்டளை, மோதல்கள் இடம்பெறும் பகுதிகளில் துணிவுடன் பணியாற்றும் பத்திரிகையாளர்களின் பாதுக்காப்பிற்காகவும், வசதிகள் அற்ற இளையோரின் கல்விக்காகவும் உழைத்து வருகிறது என்று ICN கத்தோலிக்கச் செய்தி கூறுகிறது. 

ஆதாரம் : ICN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.