2015-11-14 15:41:00

வியன்னா பேச்சுவார்த்தைகள் அமைதிக்கு வழிவகுக்கும்


நவ.14,2015.  நான்கு ஆண்டுகளுக்கு மேலாக சண்டை இடம்பெற்றுவரும் சிரியாவில் அமைதியைக் கொணரும் நோக்கத்தில் இருபது நாடுகள் மற்றும் பன்னாடு நிறுவனங்களின் பிரதிநிதிகள் இச்சனிக்கிழமையன்று கூட்டம் நடத்தியவேளை, இப்பேச்சுவார்த்தைகள் ஆயுதங்களைத் தோற்கடிக்க உதவும் என்ற நம்பிக்கையைத் தெரிவித்தார் திருஅவை அதிகாரி ஒருவர்.

சிரியா அரசுக்கும், எதிர் தரப்புக்கும் இடையே போர் நிறுத்தத்தைக் கொண்டுவரும் நோக்கத்தில் ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவில் தொடங்கியிருக்கும் கூட்டம் குறித்து ஆசிய செய்தி நிறுவனத்திடம் பேசிய சிரியா திருப்பீடத் தூதர் பேராயர் மாரியோ செனாரி அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.

சிரியாவின் நெருக்கடி நிலை, பயங்கரவாதம் போன்றவற்றைக் களைந்து, அவசரகால மனிதாபிமான உதவிக்கு வழி அமைப்பது குறித்தும், எதிர் தரப்பின் பங்கு குறித்தும் இச்சந்திப்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன.

இப்பேச்சுவார்த்தைகள், போரை முடிவுக்கு கொண்டுவந்து அமைதி நிலவ உதவும் என்ற தனது எதிர்பார்ப்பையும் வெளியிட்டார் பேராயர் செனாரி.

சிரியாவில் இதுவரை 2,50,000 பேர் இறந்துள்ளனர் மற்றும் இலட்சக்கணக்கான மக்கள் புலம் பெயர்ந்துள்ளனர்.   

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.