எருசலேம் நகரில், இயேசுவின் விண்ணேற்ற குன்றுக்கருகே 'ஒலிவ மலை ஹோட்டல்' (Mount of Olives Hotel) என்ற விடுதி அமைந்துள்ளது. இந்த விடுதியை நடத்தும் உரிமையாளர்கள், அமெரிக்க ஐக்கிய நாட்டில் வாழும் பல்லாயிரம் கிறிஸ்தவர்களுக்கு 1998ம் ஆண்டு ஒரு கடிதத்தை அனுப்பியிருந்தனர். அந்தக் கடிதத்தில் காணப்பட்ட விளம்பர வரிகள் நம் ஞாயிறு சிந்தனைகளைத் துவக்க உதவியாக உள்ளன. இதோ அந்த வரிகள்:
"2000மாம் ஆண்டு, இயேசுவின் 'இரண்டாம் வருகை' நிகழும்போது, ஒலிவ மலையில் நீங்கள் காத்திருக்க வேண்டாமா? எங்கள் ஹோட்டலில் ஓர் அறையை உங்களுக்காக ஒதுக்கி வைக்கிறோம். முன்பதிவு செய்துகொள்ளுங்கள்" என்று அக்கடிதத்தில் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.
2000மாம் ஆண்டு நெருங்கியபோது, உலக முடிவுபற்றிய பல வதந்திகள் உலவி வந்தன. இந்த வதந்திகளை மூலதனமாக்கி, வர்த்தக உலகம் இலாபம் தேட விழைந்தது; முயற்சிகளும் மேற்கொண்டது. உலகம் முடிந்தபின்னரும் தாங்கள் சேர்த்துவைக்கும் பணம் நீடிக்கும் என்று வர்த்தகர்கள் எண்ணுகின்றனரா? அல்லது, 'உலக முடிவு' என்பதை, ஒரு விளையாட்டாக மாற்றி, வேடிக்கை செய்கின்றனரா என்பது தெளிவில்லை. தங்களைச் சுற்றி நடப்பதையெல்லாம், அது, உலக முடிவேயானாலும் சரி... அதை, பணத்தின் கண்ணோட்டத்தில் காண்பது, அவர்கள் கொண்டுள்ள தீர்க்கமான எண்ண ஓட்டங்களைச் சொல்கிறது. வர்த்தக உலகம் காட்டும் ஆர்வம், உறுதி, தீர்மானம், ஆகியவை, ஆன்மீக உலகத்தைச் சார்ந்தவர்களிடம் உள்ளனவா என்பது சந்தேகம்தான். உலக முடிவு என்ற உண்மை, நம்மில் எவ்வகை எண்ணங்களை எழுப்பவேண்டும், எவ்வகையான உறுதியைத் தரவேண்டும் என்பதைச் சிந்திக்க, இந்த ஞாயிறு நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.
உலகமுடிவு பற்றிய கருத்துக்களை, குறிப்பாக, உலகம் முடியும்போது என்னென்ன நடக்கும் என்பதை, பல்வேறு கலாச்சாரங்களும், மதங்களும் சொல்லி வைத்துள்ளன. இஸ்ரயேல் மக்கள் மத்தியிலும் இவ்வெண்ணங்கள் பரவலாகப் பேசப்பட்டன. விவிலியத்தின் பல இடங்களில் உலக முடிவைப்பற்றி கூறப்பட்டுள்ளது. அவற்றில் இரு பகுதிகளை இன்றைய ஞாயிறு வழிபாட்டில் சிந்திக்க திருஅவை நம்மை அழைக்கிறது. இவ்வழைப்பு இன்று நம்மை வந்தடைவதற்குக் காரணம் உண்டு...
கத்தோலிக்கப் பாரம்பரியத்தில், ஒவ்வோர் ஆண்டையும் ஐந்து வழிபாட்டு காலங்களாகப் பிரித்துள்ளோம். திருவருகைக் காலம், கிறிஸ்து பிறப்பு காலம், தவக்காலம், உயிர்ப்பு காலம், பொதுக்காலம். இந்தப் பொதுக்காலத்தின் இறுதியை நாம் நெருங்கியுள்ளோம். அடுத்த ஞாயிறு கிறிஸ்து அரசர் திருநாள், அதற்கு அடுத்த ஞாயிறு இடம்பெறும் திருவருகைக்கால முதல் ஞாயிறுடன், திருவழிபாட்டின் புதிய ஆண்டைத் துவக்குகிறோம். பொதுக்காலத்தின் இறுதியில், இறுதிக் காலத்தைப்பற்றி சிந்திக்க, இன்றைய இறைவாக்கு நம்மை அழைக்கிறது. இறுதிக் காலம், எப்போது, எவ்விதம் வரும் என்பது தெரியாது. ஆனால், அந்தக் காலத்தைச் சந்திக்க நாம் தயாராக இருக்க வேண்டும் என்பதே இறைவாக்கு நமக்குத் தரும் அழைப்பு. இறுதிக் காலத்தைச் சந்திக்க எவ்விதம் தயார் செய்வது?
ஆங்கிலத்தில், "last minute preparation" – ‘கடைசி நிமிட தயாரிப்பு’ என்ற ஒரு சொற்றொடர் உண்டு: எல்லாரும் வாழ்க்கையில் அனுபவித்த, அனுபவிக்கும், இனியும் அனுபவிக்கவிருக்கும் ஓர் அனுபவம் இது. தேர்வுகளுக்காக பல நாட்கள், பல மாதங்கள் தயார் செய்தாலும், கடைசி நேரத்தில், தேர்வு எழுதும் அரங்கத்தின் வாசலில் நின்றபடி எத்தனை தயாரிப்புகள்! வீட்டில் நிகழும் வைபவங்களுக்கு பல நாட்கள் தயாரித்தாலும், வைபவத்திற்கு முந்திய இரவு, வைபவத்தன்று காலை, அரக்க, பரக்க, ஓடியாடி, வேலைகள் செய்கிறோம். அதேபோல், வேலைக்கான நேர்காணல் (interview), வீட்டுக்கு வரும் விருந்தினரை உபசரிக்க... என்று, கடைசி நேர தயாரிப்புக்கு எத்தனையோ எடுத்துக்காட்டுகளைச் சொல்லலாம். மேலே சொன்ன அனைத்திலும் பொதுவாக மேலோங்கியிருக்கும் ஓர் உணர்வு, எதிர்பார்ப்பு.
நல்ல காரியங்களை எதிர்பார்க்கும்போது, ஆனந்தம், ஆர்வம் இவை நம்மைச் செயல்பட வைக்கும். ஆனால், நல்லவை அல்லாத சூழல்களை நாம் எதிர்பார்க்கும்போது, நமது மனநிலை எப்படி இருக்கும்? அதுவும், நமக்கு மிக நெருங்கியவர்கள், மருத்துவமனையில், உடல்நலமின்றி, உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும்போது, எவ்வித எதிர்பார்ப்பு இருக்கும்? அதை எதிர்பார்ப்பு என்றுதான் சொல்லமுடியுமா? எதிர்பார்ப்பு, நல்லதோ, கெட்டதோ, அது எதிர்காலத்தோடு தொடர்புடையது...
எதிர்காலத்தைப்பற்றி தெரிந்து கொள்ளும் சக்தி இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று அவ்வப்போது நமக்குள் ஏக்கம் எழுவதில்லையா? இத்தகைய சக்திக்காக இளவயதில் நான் ஏங்கியதுண்டு. எடுத்துக்காட்டாக, படிக்கும் காலத்தில், ‘அடுத்த நாள் தேர்வுக்கு என்னென்ன கேள்விகள் வரும்னு தெரிஞ்சா எவ்வளவு நல்லா இருக்கும்...’ என்று ஏங்கியதுண்டு. நமக்குக் கிடைக்கப்போகும் வேலை, நமக்கு வரப்போகும் வாழ்க்கைத்துணை, நமது ஒய்வுகால வாழ்க்கை இவற்றைப்பற்றி முன்கூட்டியே தெரிந்துகொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று எத்தனை பேர் ஏங்குகிறோம்?
எதிர்காலத்தைத் தெரிந்துகொள்வதற்கு எத்தனை வழிகளை நாம் பின்பற்றுகிறோம்? கைரேகையைப் பார்த்து, கிளியைக் கேட்டு, நாள், கோள், நட்சத்திரங்களைப் பார்த்து... எத்தனை வழிகளில் எதிர்காலத்தைப்பற்றி அறிந்துகொள்ள ஆசைப்படுகிறோம்... எதிர்காலம் முழுவதும், "நல்ல காலம் பொறக்குது" என்ற சொற்களையே நாம் கேட்டுக் கொண்டிருந்தால் பரவாயில்லை. அந்த எதிர்காலத்தில் பிரச்சனைகள் மலைபோல் காத்துக் கிடக்கின்றன என்பதைத் தெரிந்துகொண்டால்... ஏன் இதைத் தெரிந்து கொண்டோம் என்று வருத்தப்படுவோம்.
எதிர்காலத்தைப்பற்றிய கேள்விகளில் மிக முக்கியமான கேள்வி: நம் ஒவ்வொருவரின் இறுதி நாள் பற்றியது... Simple ஆகச் சொல்லவேண்டுமெனில், நான் எப்போது, எப்படி இறப்பேன்? நாம் அனைவரும் மரணத்தை, ஒரு நாள் சந்திக்க இருக்கிறோம். ஆனால், அதைப்பற்றி எண்ணவும், பேசவும் தயங்குகிறோம். மரணத்தைப்பற்றி, மரித்தோரைப்பற்றி சிந்திக்க திருஅவை நமக்கு வழங்கியுள்ள ஒரு மாதம்... நவம்பர் மாதம். இன்றும் நமது இறுதி காலம்பற்றி, இந்த உலகத்தின் இறுதி காலம்பற்றி சிந்திக்க நமக்கு மற்றொரு வாய்ப்பு.
2009ம் ஆண்டு, நவம்பர் மாதம், அமெரிக்க ஐக்கிய நாட்டில், ஏறத்தாழ 3000 திரையரங்குகளில் ஒரு திரைப்படம் வெளியிடப்பட்டது. படத்தின் பெயர் 2012. 2012ம் ஆண்டு டிசம்பர் 21ம் தேதி உலகம் அழியப்போகிறது என்பதை, பிரம்மாண்டமாகக் காட்டியத் திரைப்படம் 2012. வசூலில் சாதனை படைத்ததாகச் சொல்லப்படும் இத்திரைப்படத்தில், ‘special effects’ எனப்படும் திரைப்பட வித்தைகளைப் பயன்படுத்தி, உலக அழிவு, அழகாகச் சொல்லப்பட்டது. அழிவு, அழகாகக் காட்டப்பட்டது.
உலக முடிவைப்பற்றி, சிறப்பாக, உலக அழிவைப்பற்றி, இதுவரை, நூற்றுக்கும் மேற்பட்ட ஹாலிவுட் திரைப்படங்கள் வந்துள்ளன. இனியும் வரும். இவற்றில் பெரும்பாலானவை மக்களைக் கவர்ந்த வெற்றிப் படங்கள்.
ஞாயிறு சிந்தனையில் திரைப்படங்களைப் பற்றிப் பேசுகிறேனே என்று ஒரு சிலர் சங்கடப்படலாம். ஆனால், இத்திரைப்படங்கள் ஏன் வெற்றி அடைந்தன என்பதை அலசிப்பார்த்தால், மனித இயல்பு பற்றிய ஓர் உண்மையை உணரலாம். அழிவைப் பார்க்க நமக்குள் ஆசை உள்ளது. இந்த அடிப்படை ஆசையை மூலதனமாக்கி, நமது தொடர்பு சாதனங்கள், முக்கியமாக, திரைப்படங்கள், திரைப்பட வித்தைகள் வழியே, அழிவை, பிரம்மாண்டமாக, கவர்ச்சியாக காட்டுகின்றன. இந்த பிரம்மாண்டங்கள், அழிவைப்பற்றிய துன்ப உணர்வுகளிலிருந்து நம்மை அந்நியப்படுத்தி, நமது மனங்களை மழுங்கடித்து விடுகின்றன. இது ஆபத்தான ஒரு போக்கு.
TV, சினிமா, பத்திரிகைகள் வழியே அழிவை அடிக்கடி பார்ப்பதும், அழிவைப் பிரம்மாண்டமாய்ப் பார்ப்பதும் ஆபத்து. படங்களில் பார்க்கும் அழிவுக்கும் வாழ்க்கையில் சந்திக்கும் அழிவுக்கும் பல வேறுபாடுகள். நிழல் படங்களில் அழிவைப் பார்த்து, பார்த்து பழகிவிட்டு, நிஜமாய் நடக்கும் அழிவுகளில், உயிர்கள் அழிக்கப்படுவதையோ, அல்லல்படுவதையோ உணரமுடியாமல் போகக்கூடிய ஆபத்து உள்ளது.
இந்த அழிவுகளைப்பற்றி அடிக்கடி பேசுவதும், கேட்பதும் இன்னொரு ஆபத்தை உண்டாக்கும். அழிவுகளை அடிக்கடி பார்க்கும்போது, மனதில் நம்பிக்கை வேர்கள் கொஞ்சம், கொஞ்சமாய் அறுந்துவிடும் ஆபத்தும் உள்ளது. நம்பிக்கை வேரறுக்கப்படும் போது, அவநம்பிக்கை விதைக்கப்படும், அது வேர்விட்டு வளர்ந்துவிடும். உலக முடிவையும், அழிவையும் கவர்ச்சிகரமாகக் கூறும் ஊடகங்களாகட்டும், அல்லது இந்த முடிவுகளைப் பற்றி மக்களுக்குச் சொல்லி பயமுறுத்தும் போலி மதத் தலைவர்களாகட்டும், அவர்களிடமிருந்து நாம் பெறும் செய்தி... பெரும்பாலும் அவநம்பிக்கையே.
இன்று நாம் கேட்ட இறைவாக்குகளில் அச்சத்தையும், கவலையையும் உருவாக்கக் கூடிய வார்த்தைகள் ஒலித்தாலும், நம்பிக்கை அளிக்கும் வார்த்தைகளும் ஒலிக்கின்றன.
நூலில் யார் யார் பெயர் எழுதப்பட்டுள்ளதோ, அவர்கள் அனைவரும் மீட்கப்படுவார்கள். இறந்துபோய் மண்புழுதியில் உறங்குகிற அனைவருள் பலர் விழித்தெழுவர்: அவருள் சிலர் முடிவில்லா வாழ்வு பெறுவர்: வேறு சிலரோ வெட்கத்திற்கும் முடிவில்லா இழிவுக்கும் உள்ளாவர். ஞானிகள் வானத்தின் பேரொளியைப் போலவும், பலரை நல்வழிக்குக் கொணர்ந்தவர் விண்மீன்களைப் போலவும், என்றென்றும் முடிவில்லாக் காலத்திற்கும் ஒளிவீசித் திகழ்வர்.
என்று தானியேல் நூலிலும்,
விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும்; ஆனால் என் வார்த்தைகள் ஒழியவேமாட்டா.
என்று மாற்கு நற்செய்தியிலும் நம்பிக்கை அளிக்கும் இறைவார்த்தைகள் ஒலிக்கின்றன.
இறுதியாக, ஓர் எண்ணம். 'எதிர்' என்ற தமிழ் சொல்லுக்குள் எத்தனை பொருள் இருக்கிறது! எதிர்காலம் என்பதை, எதிர் வரும் காலம், எதிர் பார்க்கும் காலம், நமக்கு எதிராக வரும் காலம், நமக்கு எதிரியாக வரும் காலம், நாம் எதிர்த்து நிற்கவேண்டிய காலம், நாம் எதிர்கொண்டு சென்று வரவேற்கவேண்டிய காலம்... என்று பல பொருள்பட பேசலாம். 'எதிர்' என்ற சொல்லில் ஆனந்தம், ஆர்வம் இருக்கும். ஆபத்தும், ஆதங்கமும் இருக்கும். இந்த உணர்வுகளெல்லாம் நடக்கப்போகும் சம்பவங்களில் இருக்கின்றன என்பதைவிட, இவற்றை நாம் பார்க்கும் கண்ணோட்டத்தைப் பொறுத்தே நம் உணர்வுகளும், செயல்பாடுகளும் இருக்கும். எதிர்காலத்தைப் பற்றி, சிறப்பாக இறுதிக் காலத்தைப் பற்றி நமது கண்ணோட்டம் என்ன?
எதிர் காலத்தைத் தெரிந்து கொள்வதில் காட்டும் ஆர்வத்தில் ஒரு பகுதியையாவது அந்த எதிர் காலத்தை எதிர்கொள்ளும் மனப் பக்குவத்தை வளர்ப்பதில் செலவிட்டால், எவ்வளவோ பிரச்சனைகளைச் சமாளிக்கலாம், வெல்லலாம். ஆங்கிலத்தில் அழகிய பொன்மொழி ஒன்று உண்டு: "For all that has been...thanks! For all that will be...yes!" “இதுவரை நடந்தவற்றிற்கு…நன்றி! இனி நடக்கப் போகின்றவற்றிற்கு… ஆகட்டும்!” என்ற கண்ணோட்டம் பதட்டமில்லாத நம்பிக்கையை வளர்க்கும். எதிர்காலம் என்பது, பிரச்சனைகளை கூட்டமாகச் சேர்த்துக்கொண்டு வந்தாலும், அந்தக் கூட்டத்தின் மத்தியில் நல்லவற்றை, நல்லவர்களைப் பார்த்து, கைகுலுக்கிக் கொள்ளும் பக்குவத்தை நாம் பெறவேண்டும்.
இதை ஓர் உருவகத்தில் சொல்ல வேண்டுமெனில், எதிர்காலம் மலைபோல் குவிந்த ஒரு குப்பையாக தெரிந்தாலும், அந்த குப்பையின் நடுவிலும் வைரங்கள் மின்னுவதை நம் கண்கள் பார்க்கும்போது, குப்பை மறைந்துவிடும்... (வெளியில் மறைந்துவிடாது... நமது பார்வையில் மறைந்துவிடும்.) வைரங்கள் மட்டும் தெரியும். குப்பைகளை விலக்கி, குண்டுமணிகளை, வைரங்களைப் பார்க்கும், வைரங்களைச் சேர்க்கும் மனப்பக்குவத்தை நாம் வளர்த்துக் கொள்ள இறைவன் துணையை நாடுவோம்.
விரைவில் - டிசம்பர் 8ம் தேதி - நாம் இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டைத் துவக்கவிருக்கிறோம். இரத்தக் கறைபடிந்த இவ்வுலகம், இறை இரக்கத்தில் முற்றிலும் நனைந்து, கழுவப்பட்டு, அமைதியில், அன்பில் வாழும் என்ற நம்பிக்கையை வளர்க்க, இந்த யூபிலி ஆண்டு நமக்கு வழங்கப்பட்டுள்ளது. அழிவைப்பற்றி அடிக்கடி பேசி, அவநம்பிக்கை என்ற நோயைப் பரப்பிவரும் உலகப் போக்கிற்கு ஒரு மாற்று மருந்தாக, இறைவனின் இரக்கம், இறுதிகாலம் வரைத் தொடரும் என்ற நம்பிக்கையை நமக்குள் நாமே வளர்ப்போம். பிறரிடமும் இந்த நம்பிக்கையை வளர்ப்போம்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |