2015-11-14 15:20:00

பாரிஸ் தாக்குதல்கள், அமைதி விரும்பும் மக்கள் மீதான தாக்குதல்


நவ.14,2015. மேலும், பாரிசிலும், அதைச் சுற்றிலும் உள்ள பல்வேறு  இடங்களில் பயங்கரவாதிகள் நடத்தியுள்ள தற்கொலைப் படை தாக்குதல்கள், அமைதியை விரும்பும் அனைத்து மக்கள் மீதான தாக்குதல்கள் என்று திருப்பீடம் கூறியுள்ளது.

இத்தாக்குதல்கள் குறித்து அறிக்கை வெளியிட்ட திருப்பீடச் செய்தித் தொடர்பாளர் இயேசு சபை அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி அவர்கள், அறிவற்ற பண்பின் மற்றும் வெறுப்பின் புதிய வெளிப்பாடான இந்தப் பயங்கரவாத வன்முறையை, அமைதியை விரும்பும் அனைவரும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் சேர்ந்து, மிக வன்மையாகக் கண்டிக்கிறோம் என்று கூறினார்.

இதில் பலியானவர்கள், காயமடைந்தவர்கள் மற்றும் அனைத்து ப்ரெஞ்ச் மக்களுக்காகவும் செபிப்பதாகவும் கூறியுள்ள அருள்பணி லொம்பார்தி அவர்கள், வெறுப்பை உமிழும் இத்தகைய தற்கொலைப் படை தாக்குதல்கள் பரவுவதற்கு எதிரான அனைத்து முயற்சிகளுக்கும் ஆதரவைத் தெரிவிப்போம் என்றும் கூறியுள்ளார்.  

பாரிசில் உள்ள பட்டாக்லான் இசையரங்கிலும் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அங்கிருந்த பொதுமக்களில் சிலரை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்தனர். மொத்தம் 8 தீவிரவாதிகள் அந்த அரங்குக்குள் அதிரடியாக நுழைந்தனர். அவர்களில் 7 பேர் மனித வெடிகுண்டுகளாக செயல்பட்டனர். ஏழு பேரும் பலியாகினர். எஞ்சிய ஒரு தீவிரவாதி பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் கொல்லப்பட்டார். பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இத்தகவலை பிரான்ஸ் அரசு உயர் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், லா பெல்லே எபோக் என்ற தேநீர் விடுதியில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 18 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.