2015-11-14 14:38:00

ஒரு குழந்தைக்குப் படிக்க வாய்ப்பளிப்பது மிகச் சிறந்த கொடை


நவ.14,2015. புலம்பெயரும் இளையோர்க்கு வழங்கப்படும் கல்வி, அவர்கள் தங்களின் உண்மையான அழைப்பை உணர்ந்து, தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கு உதவுகின்றது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

அனைத்துலக இயேசு சபை புலம்பெயர்ந்தோர் பணி அமைப்பு JRS ஆரம்பிக்கப்பட்டதன் 35ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, அவ்வமைப்பின் பணியாளர்கள் உதவியாளர்கள் என, 160 பேரை இச்சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, இவ்வமைப்பு புலம்பெயர்ந்தோர்க்கு ஆற்றிவரும் முக்கிய கல்விப்பணியை பாராட்டி ஊக்குவித்தார்.

ஒரு குழந்தை பள்ளியில் படிக்க வாய்ப்பளிப்பது, இவ்வமைப்பினர் வழங்கக்கூடிய மிகச் சிறந்த கொடை என்றுரைத்த திருத்தந்தை, இவ்வமைப்பினரின் அனைத்துத் திட்டங்களும் புலம்பெயரும் மக்கள் தன்னம்பிக்கையில் வளரவும், தங்களின் உயரிய திறமைகளைக் கண்டுணர்ந்து, தனிநபராகவும், சமூகமாகவும் உரிமைகளுக்குப் போராடவும் உதவுகின்றன என்றும் கூறினார்.

தொடங்கவிருக்கும் இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில், “கருணையை முன்னெடுத்துச் செல்ல (Mercy in Motion)” என்ற விருதுவாக்குடன், புலம்பெயர்ந்த பல்லாயிரக்கணக்கான இளையோர்க்கு கல்வி வழங்குவதற்கு JRS அமைப்பு திட்டமிட்டிருப்பதைப் பாராட்டிய திருத்தந்தை, இத்திட்டத்திற்கு உதவும் அனைவருக்கும் நன்றியும் தெரிவித்தார்.

ஹிரோஷிமாவில் அணுகுண்டு வெடித்தபோது அங்கு வாழ்ந்த, அகில உலக இயேசு சபையின் முன்னாள் தலைவர் மறைந்த அருள்பணி பேத்ரோ அருப்பே அவர்கள் சிந்தனையில் JRS அமைப்பு உருவானதைக் குறிப்பிட்டுப் பேசிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், போர் நிறைந்த சூழல்களில், குறிப்பாக, சிரியா, ஆப்கானிஸ்தான், மத்திய ஆப்ரிக்க குடியரசு, காங்கோ சனநாயகக் குடியரசின் கிழக்குப் பகுதி போன்ற இடங்களில் இவ்வமைப்பு ஆற்றிவரும் மகத்தான சேவைகளைப் பாராட்டினார்.  

45 நாடுகளில், பத்து பல்வேறு பகுதிகளில் உள்நாட்டில் புலம்பெயர்ந்தவர்களுக்கும் இவ்வமைப்பு பணியாற்றி வருகின்றது என்றும் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது செபத்தை உறுதி கூறிய அதேநேரம், தனக்காகச் செபிக்க மறக்க வேண்டாம் என தயவுடன் கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.