2015-11-13 16:29:00

கல்வி, இன்றும் நாளையும்:பேரார்வத்தைப் புதுப்பித்தல்


நவ.13,2015. “கல்வி, இன்றும் நாளையும்:பேரார்வத்தைப் புதுப்பித்தல்”  என்ற தலைப்பில், இம்மாதம் 18ம் தேதி முதல், 21ம் தேதி வரை, உரோமையில் நடைபெறவிருக்கும் உலக மாநாடு குறித்து இவ்வெள்ளியன்று பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் விளக்கப்பட்டது.

Gravissimum educationis என்ற கிறிஸ்தவ கல்வி குறித்த 2ம் வத்திக்கான் பொதுச் சங்க அறிக்கை வெளியிடப்பட்டதன் 50ம் ஆண்டு நிறைவு மற்றும் கத்தோலிக்க பல்கலைக்கழகங்கள் குறித்த அப்போஸ்தலிக்க அறிக்கை Ex corde Ecclesiae வெளியிடப்பட்டதன் 25ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு இம்மாநாடு நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. கத்தோலிக்க கல்வி பேராயத் தலைவர் கர்தினால் Giuseppe Versaldi, அப்பேராயச் செயலர் ஆயர் Angelo Vincenzo Zani, உரோம் LUMSA பல்கலைக்கழக பேராசிரியர் Italo Fiorin ஆகிய மூவரும் திருப்பீட செய்தித் தொடர்பகத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் இம்மாநாடு குறித்து விளக்கினர்.

திருஅவை கல்வி மீது கொண்டிருக்கும் பேரார்வத்தில் கத்தோலிக்க கல்வி பேராயத்தின் ஈடுபாட்டை எடுத்துரைப்பதாய் இம்மாநாடு அமையும் என்று கர்தினால் Versaldi அவர்கள் கூறினார்.

2011ம் ஆண்டில் கத்தோலிக்க கல்வி பேராயத்தின் கர்தினால்கள் மற்றும் ஆயர்கள் நட்த்திய ஆண்டுக் கூட்டத்தில் இத்தகைய மாநாடு நடத்தப்படுவதற்கு எண்ணம் உருவானது என்றும், அதன்பின்னர் 2012ம் ஆண்டில் ஏறக்குறைய 50 வல்லுனர்கள் உரோமையில் கூடி உலகில் கத்தோலிக்க கல்வியை ஊக்குவிப்பதில் திருஅவை எதிர்நோக்கும் பிரச்சனைகள் பற்றி கலந்தாலோசிக்கப்பட்டது என்றும், பல முக்கிய நிறுவனங்களிடமிருந்து பரிந்துரைகள் சேகரிக்கப்பட்டன என்றும் ஆயர் Zani அவர்கள் தெரிவித்தார்.

இம்மாநாட்டில் கலந்துகொள்ளும் 2,200க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் நவம்பர் 21ம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்திப்பார்கள் என்றும் அறிவித்தார் ஆயர் Zani.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.