2015-11-13 16:43:00

அனைத்துலக மனிதாபிமான சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட அழைப்பு


நவ.13,2015. மனிதப்பண்பற்ற போர்கள் மற்றும் ஆயுதம் ஏந்திய மோதல்கள் நிறுத்தப்படுவதற்கு, அனைத்துலக மனிதாபிமான சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டியது மிகவும் முக்கியம் என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் ஐ.நா.வில் கூறினார்.

ஜெனீவாவிலுள்ள ஐ.நா. மற்றும் பிற பன்னாட்டு நிறுவனங்களுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளரான பேராயர் சில்வானோ தொமாசி அவர்கள், ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதைத் தடைசெய்யும் ஒப்பந்தம் குறித்த ஐ.நா. கூட்டத்தில் இவ்வியாழனன்று உரையாற்றியபோது இவ்வாறு தெரிவித்தார்.

ஆயுதம் தாங்கிய மோதல்கள் மற்றும் பாதுகாப்பு பதட்டநிலைகள், ஆயிரக்கணக்கான இறப்புகளுக்கும், இலட்சக்கணக்கான மக்கள் புலம்பெயர்வதற்கும், அழிவுக்கும், வர்ணிக்கமுடியாத துன்பங்களுக்கும் காரணமாகியுள்ளன என்பதையும் சுட்டிக்காட்டினார் பேராயர் தொமாசி.

ஆயுதத் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நாடுகள், அனைத்துலக மனிதாபிமான சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதில் தற்போது அதிகக் கவனம் செலுத்த வேண்டும், ஏனெனில் அடுத்த தலைமுறைகளின் வருங்காலம் ஆபத்தில் உள்ளது என்றும் பேராயர் தொமாசி கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி 








All the contents on this site are copyrighted ©.