2015-11-12 16:31:00

நவம்பர் 12 - மும்பையில், தேசிய நற்கருணை மாநாடு துவக்கம்


நவ.12,2015. 1964ம் ஆண்டு, மும்பை நகரில் நடைபெற்ற அகில உலக திருநற்கருணை மாநாட்டின் 50ம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், நவம்பர் 12, இவ்வியாழனன்று மும்பையில், தேசிய நற்கருணை மாநாடு துவங்கியது.

"திருநற்கருணையால் ஊட்டம் பெற்று, மற்றவர்களை ஊட்டம் பெறச் செய்தல்" என்ற தலைப்பில் நடைபெறும் இந்த நற்கருணை மாநாட்டில், திருத்தந்தையின் பிரதிநிதியாக, கொழும்பு பேராயர், கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள் கலந்துகொள்கிறார்.

இந்திய ஆயர் பேரவைத் தலைவர், கர்தினால் பசிலியோஸ் கிளீமிஸ், மும்பைப் பேராயர், கர்தினால் ஆஸ்வால்ட் கிரேசியஸ், சீரோ மலபார் உயர் பேராயர், கர்தினால் ஜார்ஜ் அலெஞ்சேரி மற்றும் இராஞ்சி பேராயர், கர்தினால் டெலெசஸ்போர் டோப்போ ஆகியோர் பங்கேற்கும் இந்த மாநாட்டில், 75 ஆயர்களும், 665 பிரதிநிதிகளும் கலந்து கொள்கின்றனர் என்று UCAN செய்திக் குறிப்பு கூறுகிறது.

இவ்வியாழனன்று துவங்கிய இந்த மாநாட்டின் துவக்கத் திருப்பலியை கர்தினால் கிரேசியஸ் அவர்கள் தலைமையேற்று நடத்தினார். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இந்த மாநாட்டிற்கு அனுப்பிய காணொளிச் செய்தி ஒளிபரப்பானது.

கர்தினால் டோப்போ அவர்கள் வழங்கிய தலைமை உரையைத் தொடர்ந்து, அருளாளர் அன்னை தெரேசாவின், பிறரன்புப் பணியாளர்கள் சபையின் தலைவி, அருள் சகோதரி பிரேமா அவர்கள், தன் வாழ்விலிருந்து சாட்சியம் வழங்கினார்.

2008ம் ஆண்டு ஒடிஸ்ஸா மாநிலத்தின் கந்தமால் பகுதியில், இந்து அடிப்படைவாதக் கும்பலால் துன்புறுத்தப்பட்ட கிறிஸ்தவர்களில் இருவர், தங்கள் விசுவாச வாழ்வைப் பகிர்ந்துகொள்வது, இம்மாநாட்டின் ஓர் உச்சகட்ட நிகழ்வாக அமையும் என்று தெரிகிறது.

இம்மாநாட்டையொட்டி உருவாக்கப்பட்டுள்ள 'Panis Angelicus' என்ற கண்காட்சியை, கர்தினால் இரஞ்சித் அவர்கள் திறந்து வைத்தார்.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.