2015-11-12 16:38:00

குவனெல்லா குடும்ப திருப்பயணிகளைச் சந்தித்தத் திருத்தந்தை


நவ.12,2015. புனித லூயிஜி குவனெல்லா (Luigi Guanella) இறைவனின் பராமரிப்பில் நம்பிக்கை கொண்டு, மனிதர்களால் முடியும் என்று எண்ணக்கூடிய எல்லைகளைக் கடந்து பணியாற்றினார் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

புனித லூயிஜி குவனெல்லா அவர்களால் துவங்கப்பட்ட குவனெல்லா துறவுச் சபையைச் சேர்ந்த இருபால் துறவியர், மற்றும், பொதுநிலையினர் அமைப்பைச் சார்ந்தவர்கள் என்று 5000த்திற்கும் அதிகமானோரை, இவ்வியாழன் காலை அருளாளர் ஆறாம் பவுல் அரங்கத்தில் சந்தித்தத் திருத்தந்தை, இப்புனிதர் இன்று கூறும் செய்திகளை குவனெல்லா குடும்பத்தினர் உணரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

நம்பிக்கைக் கொண்டிருத்தல், கவனமாகக் கண்நோக்குதல், விரைந்து செல்லுதல் என்ற மூன்று செய்திகளை புனித குவனெல்லா அவர்கள் நமக்குத் தருகிறார் என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.

'வறியோருக்கு வழங்குவது, இறைவனுக்குக் கடன்கொடுப்பது' என்று, புனித குவனெல்லா கூறிய வார்த்தைகளை மேற்கோளாகக் கூறியத் திருத்தந்தை, வறுமை காத்திருக்காது என்றும், வறியோர் இவ்வுலகில் இருக்கும்வரை உதவிகள் செய்வதை நிறுத்தக்கூடாது என்றும் இப்புனிதர் வலியுறுத்தியதையும் சிறப்பாகக் குறிப்பிட்டார்.

மேலும், "நெருக்கடிகளை அனுபவித்துவரும் குடும்பங்களுக்கு உதவி செய்வதில், நல்லாயனைப் போல் செயலாற்ற, கிறிஸ்தவர்களாகிய நாம் அழைக்கப்பட்டுள்ளோம்" என்ற வார்த்தைகளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டர் செய்தியாக, இவ்வியாழனன்று வெளியிட்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.