2015-11-12 13:38:00

கடுகு சிறுத்தாலும் – எச்சூழலிலும் நிதானம் இழக்கக் கூடாது


அந்த ஆசிரமத்தில் பஞ்ச பாண்டவர்களையும் சேர்த்து இருபது பேர் இரண்டு ஆண்டுகள் குருகுல படிப்பை முடித்தனர். எல்லாரும் ஊருக்குத் திரும்பும் நேரத்தில் ஆசிரியர் ஒவ்வொருவரிடமும், இதுவரைக்கும் நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள் என்று கேட்டார். அங்குப் படிக்க வந்த மாணவர்கள் எல்லாருமே இளவரசர்கள், அறிவாளிகள். அதனால் ஆசிரியர் அவர்களிடம் அதிகம் எதிர்பார்த்தார். ஒவ்வொருவரும் தங்களின் ஓலைச் சுவடிகளைப் பிரித்து தாங்கள் எழுதி வைத்திருந்த பாடங்களை வாசித்துக் காட்டினார்கள். ஆனால் தர்மர் மட்டும் ஓலைச் சுவடியைப் பிரிக்கவே இல்லை. ஆசிரியர் அவரிடம், உனது ஓலைச் சுவடியைப் பிரித்து வாசி என்றார். தர்மர் அசையவே இல்லை. ஐயா, நான் கற்றுக்கொண்டது ஒன்றே ஒன்றுதான். அதுவே எனக்கு வாழ்வில் மிகவும் முக்கியமான பாடமாக அமையும் என்றார் தர்மர். என்னது, இரண்டு ஆண்டுகளில் நீ படித்தது ஒன்றே ஒன்றுதானா, புரியவில்லையே என்றார் ஆசிரியர். தர்மா, நன்றாக சிந்தித்துச் சொல் என்று மீண்டும் ஆசிரியர் கேட்க, தர்மர் முகத்தில் எந்த மாறுதலும் இல்லை. நீ ஓலைச் சுவடியில் நிறைய குறித்துதானே வைத்திருக்கிறாய், அதை வாசி என்றார் ஆசிரியர். ஐயா என்னை மன்னிக்கனும், வேறு எதையும் சொல்ல நான் விரும்பவில்லை என்று கூறி, தான் முதலில் சொன்னதையே தர்மர் திரும்பச் சொன்னார். மற்ற மாணவர்கள் கிண்டலாகச் சிரித்தனர். ஆசிரியருக்கு கோபம் வரவே, தர்மரின் கன்னத்தில் பளார் என ஓங்கி ஓர் அறைவிட்டார். தர்மரின் கன்னம் சிவந்து கண்கள் கலங்கின. ஆயினும் அமைதியை இழக்காமல் தலைகுனிந்து நின்றார். தர்மரின் பிடிவாதம் ஆசிரியரின் கோபத்தை எல்லைக்கடக்க வைத்தது. அதனால் மறுகன்னத்திலும் அறைந்து, அப்படி என்னதான் கத்துக்கிட்ட சொல்லு என்றார். ஐயா, அதைமட்டும் தனியாக ஓர் ஓலைச்சுவடியில் குறித்து வைத்துள்ளேன், இந்தாருங்கள், அதை நீங்களே வாசியுங்கள் என்றார் தர்மர். ஆசிரியரும் அதை வாங்கி, எப்படிப்பட்ட சோதனை ஏற்பட்டாலும் நிதானம் இழந்து கோபத்துக்கு ஆளாகக் கூடாது என்று வாசித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.