2015-11-11 16:22:00

போஸ்னியா-ஹெர்சகொவினா மக்களிடம் கற்றுக்கொண்ட பாடங்கள்


நவ.11,2015. துன்பங்களைத் தாங்கிக் கொள்வதற்கும், மன்னிப்பதற்கும், உரையாடல் கலாச்சாரத்தை வளர்த்துக்கொள்வதற்கும், பிறருடன் இணைந்து, பொதுநலனுக்காக உழைப்பதற்கும், போஸ்னியா-ஹெர்சகொவினா மக்களிடம் தான் கற்றுக்கொண்டதாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

நவம்பர் 11, இப்புதன் காலை, தன்னைச் சந்திக்க வந்திருந்த போஸ்னியா-ஹெர்சகொவினா அரசுத் தலைவர், Dragan Čović அவர்களையும், உடன் வந்திருந்த அரசு அதிகாரிகளையும் அருளாளர் திருத்தந்தை 6ம் பவுல் அரங்கத்திற்கு அருகே உள்ள ஓர் அறையில் சந்தித்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாண்டு ஜூன் மாதம் அந்நாட்டில் தான் மேற்கொண்ட பயணத்தின் நினைவுகள் தன் மனதில் பசுமையாக உள்ளன என்று கூறினார்.

போஸ்னியா-ஹெர்சகொவினா நாட்டில் தான் சந்தித்த இளையோரையும், அவர்கள் தன்னிடம் எழுப்பியக் கேள்விகளையும் தனிப்பட்ட முறையில் நினைவுகூர்ந்த திருத்தந்தை, இளையோர் அந்நாட்டிற்கு நம்பிக்கை தரும் எதிர்காலம் என்று குறிப்பிட்டார்.

இவ்வாண்டு ஜூன் மாதம் 6ம் தேதியன்று போஸ்னியா-ஹெர்சகொவினா நாட்டிற்கு திருத்தூதுப் பயணம் மேற்கொண்ட திருத்தந்தை, அந்நாட்டின் Sarajevo நகரை, ‘ஐரோப்பாவின் எருசலேம்’ என்று ஒப்புமைப்படுத்தியது, குறிப்பிடத் தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.