2015-11-11 16:15:00

பிளாரன்ஸ் நகர் திருப்பலியில் திருத்தந்தை வழங்கிய மறையுரை


நவ.11,2015. மக்கள் நடுவில், மக்களுக்காக வாழ்ந்த இயேசுவைப் போல, திருஅவையும் தன் மக்கள் மத்தியில் மகிழ்ந்து வாழ்கிறது என்பதற்கு, பிளாரன்ஸ் நகரில் அமைந்துள்ள விளையாட்டுத் திடலில் நாம் கொண்டாடும் இத்திருப்பலியே ஒரு சிறந்த அடையாளம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

இத்தாலிய கத்தோலிக்கத் திருஅவையின் ஐந்தாவது தேசிய மாநாட்டில் பங்கேற்க, நவம்பர் 10, இச்செவ்வாயன்று பிளாரன்ஸ் நகர் சென்றிருந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் ஒருநாள் பயணத்தின் இறுதியில், பிளாரன்ஸ் மாநகராட்சியின் Luigi Franchi விளையாட்டுத் திடலில் திருப்பலியாற்றிய வேளையில், இவ்வாறு மறையுரை வழங்கினார்.

நவம்பர் 10ம் தேதி கொண்டாடப்பட்ட புனிதத் திருத்தந்தை பெரிய லியோ அவர்களின் திருநாளையொட்டி, இயேசு தன் சீடர்களிடம் விடுத்த "மக்கள் என்னை யாரென்று சொல்கிறார்கள்? நீங்கள் என்னை யாரென்று சொல்கிறீர்கள்?" என்ற இரு கேள்விகளை மையப்படுத்தி மறையுரை வழங்கினார்.

மக்களுடன் இன்னும் ஆழமாக தொடர்புகொள்ளும் வகையில், மக்கள் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை இயேசு அறிய விழைந்தார் என்று கூறியத் திருத்தந்தை, மக்களுக்குப் பணியாற்றும் அருள் பணியாளர்களும், தங்கள் மந்தையின் நறுமணத்தை உணர்வதற்கு, அவர்கள் நடுவில் வாழவேண்டும் என்று எடுத்துரைத்து, மக்கள் நடுவில் திருஅவை வாழ்வதன் ஓர் அடையாளமே, இந்த விளையாட்டு திடலில் நிகழும் திருப்பலி என்பதைச் சுட்டிக்காட்டினார்.

"நீங்கள் என்னை யாரென்று சொல்கிறீர்கள்?" என்று இயேசு தன் சீடர்களிடம் விடுத்த கேள்வி, பல நூற்றாண்டுகளாக, இயேசுவின் சீடர்கள் அனைவருக்கும் விடுக்கப்பட்டு வருகிறது என்பதை தன் மறையுரையில் சிறப்பாகக் குறிப்பிட்டத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்தக் கேள்விக்கு சிறந்த பதிலை உணர்ந்திருந்த புனிதத் திருத்தந்தை பெரிய லியோ அவர்கள், தன் வாழ்வாலும், எழுத்து வடிவிலும், சொற்களாலும் சிறந்த பதில் வழங்கினார் என்று கூறினார்.

இயேசு யார் எனபதை அறிய முடியாமலும், அறிய விரும்பாமலும் இருக்கும் இன்றைய உலகில், கிறிஸ்தவர்களாகிய நாம், நமது வாழ்வில் வெளிப்படும் மகிழ்வின் வழியே, இயேசுவை உலகறியச் செய்வது அவசியம் என்று தன் மறையுரையில் வலியுறுத்தினார், திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.