2015-11-11 16:30:00

பிளாரன்ஸ் நகரில் சிறைக் கைதிகள் உருவாக்கிய திருப்பலி பீடம்


நவ.11,2015. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நவம்பர் 10 இச்செவ்வாயன்று பிளாரன்ஸ் நகரில் மேற்கொண்ட பயணத்தின்போது, அந்நகரில், புனித பிரான்சிஸ் பெயரால் இயங்கிவரும் அமைப்பினர் வழங்கிய மதிய உணவை 60க்கும் மேற்பட்ட வறியோரோடு உண்டார்.

வறியோர் ஒவ்வொருவரும் இந்த மதிய உணவைப் பெறுவதற்கு அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த நுழைவுச் சீட்டில் ஒன்று, திருத்தந்தைக்கும் வழங்கப்பட்டது என்பதும், வறியோர் அனைவரோடும் அமர்ந்து, திருத்தந்தை மதிய உணவை 'பிளாஸ்டிக்' தட்டில் உண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கன.

மேலும், பிளாரன்ஸ் நகரில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருப்பலி ஆற்றிய அந்தப் பீடத்தை, அந்நகரின் சிறைக்  கைதிகள் உருவாக்கியிருந்தனர் என்பதை, திருப்பலியின் இறுதியில், திருத்தந்தை சிறப்பாகக் குறிப்பிட்டு, சிறைக் கைதிகளின் உழைப்பை, இயேசு தன் சிறப்புப் பிரசன்னத்தால் ஆசீர்வதித்துள்ளார் என்று கூறினார்.

இச்செவ்வாய் முழுவதும் தான் அனுபவித்த வரவேற்பிற்கு தன் தனிப்பட்ட நன்றிகளைத் தெரிவித்தத் திருத்தந்தை, மாலை 5 மணிக்கு பிளாரன்ஸ் நகரைவிட்டு புறப்பட்டு, 6 மணிக்கு வத்திக்கானை வந்தடைந்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.