2015-11-11 15:06:00

கடுகு சிறுத்தாலும் – கதைகளுக்குள் காரண காரியங்களைத் தேடாதீர்


தினமும் தாயிடம் கதை கேட்டுத் தூங்கும் இராமுவும் பூங்கோதையும், அன்றிரவு ஆளுக்கொரு கேள்வியை தாயிடம் முன்வைத்தனர். 'ஏனம்மா, காகத்தின் கூட்டில் போய் குயில் முட்டையிடுகிறது?' என இராமு கேட்க, ‘அம்மா, அம்மா, ஆந்தை மட்டும் ஏன் பகல் முழுவதும் தூங்கி விட்டு, இரவில் கண்விழித்திருக்கிறது என்று என் கேள்விக்கு முதலில் பதில் சொல்லுங்கள்’ என்று பூங்கோதை நச்சரிக்க, தாய்க்குப் புரிந்து விட்டது, இன்று இவர்கள் தங்கள் நண்பர்களுடன் பறவைகள் பற்றி விவாதம் செய்திருக்க வேண்டும் என்று. ‘ஒரே கதை மூலம் உங்கள் இருவரின் கேள்விக்கும் விடையளிக்கிறேன்’ என சொல்லத் தொடங்கினார் தாய்.

‘ஒரு முறை ஒரு காகமும் ஆந்தையும் மிகவும் நட்பாக இருந்தன. ஒரு நாள் ஆந்தைக்கு உடல் நிலை சரியில்லாமல் ஆனபோது, அதை அழைத்துக்கொண்டு காட்டில் மருத்துவராக இருந்த குயிலிடம் சென்றது காகம். குயில் நன்றாக மருத்துவம் பார்த்து ஆந்தையைக் குணமாக்கிவிட்டது. அதன் பிறகு மருத்துவருக்கு கட்டணம் கொடுக்கணும் இல்லையா? ஆனால், இவர்கள் இருவரும் கொடுக்கவில்லை. இவர்கள் இருவரும், எங்களிடம் பணம் இல்லை என்று சொல்லிவிட்டு ஓடி வந்துவிட்டனர். அதன் பிறகு இவர்கள் இருவரையும் பார்க்கும் பொழுதெல்லாம் பணம் கேட்க ஆரம்பித்தது குயில்.. ஏதுடா தொல்லையாப்போச்சு என்று நினைத்த ஆந்தையார், பகலில் தலைகாட்டுவதே இல்லை. இரவில் மட்டுமே வெளியே வருவதும், இரையைப் பிடித்து தின்பதுமாக இருந்திருக்கிறார். இப்படியே இருந்ததால் ஆந்தையாரைக் கண்டுபிடிக்க முடியவில்லை குயில் மருத்துவரால். அதனால் ஆத்திரமடைந்த குயில் மருத்துவர், காகத்தைப் பிடித்து நன்கு திட்டியது மட்டுமல்ல, இனிமேல் தங்கள் இனத்தார் இடும் முட்டைகளை எல்லாம் காக்கை இனத்தார்தான் காவல் காக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டது. அன்றிலிருந்து குயில் இனத்தார் அனைவரும் காக்கையின் கூட்டில் தங்கள் முட்டைகளை இட்டுவிட்டு சென்று விடுவர். அது குயிலின் முட்டை என்பது தெரியாமலேயே காக்கை இனம் வளர்த்து கொண்டு வருகிறது. ஆந்தை இனத்தார் பகலில் தூங்கித் தூங்கியே, பகலில் கண் தெரியாமல் போய்விட்டது. இதுதான் நடந்த கதை,'' என்றார் தாய்.

"பிறரை ஏமாற்றுவதால் ஏற்படும் கஷ்டம், காலம் காலமாக, பரம்பரை பரம்பரையாக, பலரைப் பாதிப்பதைப் புரிந்து கொண்டோம். இனிமேல் நாங்கள் ஒருகாலும் இப்படிப்பட்ட காரியத்தை செய்யவே மாட்டோம்,'' என்றனர் குழந்தைகள் இருவரும்.

செல்லமாக தன் குழந்தைகளை அணைத்து முத்தமிட்ட தாய், தான் சொன்னது ஒரு பொய் கதை என்றாலும், அதனால் குழந்தைகள் நல்ல பாடம் கற்றுக்கொண்டனர் என்பதை எண்ணி மகிழ்ச்சியடைந்தார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 








All the contents on this site are copyrighted ©.