2015-11-11 16:44:00

இலங்கை போரில் இறந்தோர், மறைந்தோரின் சிறப்பு நினைவு


நவ.11,2015. இறந்தோரை நினைவுகூரும் நவம்பர் மாதத்தில், இலங்கை வாழ் கத்தோலிக்கர், தங்கள் உள்நாட்டுப் போரில் இறந்தோரையும், மறைந்தோரையும் சிறப்பாக நினைவு கூர்ந்தனர் என்று ஆசிய செய்தி கூறியுள்ளது.

கொழும்பு உயர் மறைமாவட்டத்தைச் சேர்ந்த புனித செசிலியா கோவிலுக்கருகே அமைந்துள்ள கல்லறைத் தோட்டத்தில், இந்த நினைவு வழிபாடு நடைபெற்றது.

உள்நாட்டுப் போரில் இறந்தோர், மற்றும் மறைந்தோர் நினைவாக, உருவாக்கப்பட்ட ஓர் அமைப்பைச் சேர்ந்தவர்கள், 2000மாம் ஆண்டு முதல், இக்கல்லறைத் தோட்டத்தில் ஒரு சிறப்புப் பகுதியை நிறுவியுள்ளனர் என்றும், இப்பகுதியில் 600க்கும் மேற்பட்டோரின் புகைப் படங்கள் வைக்கப்பட்டுள்ளன என்றும் ஆசியச் செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது.

உலகின் பல்வேறு நாடுகளில், காணாமற் போனவர்களின் எண்ணிக்கையில், 16,000த்திற்கும் அதிகமானோரைக் கொண்டுள்ள ஈராக் நாட்டிற்கு அடுத்தபடியாக, இலங்கை, 5,750 என்ற எண்ணிக்கையுடன், இரண்டாவது இடம் வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, இலங்கையில் நீண்டகாலமாக சிறையில் இருந்த தமிழ் அரசியல் கைதிகளில் 31 பேருக்கு, இப்புதனன்று, கொழும்பு நீதி மன்றம் ஒன்று, பிணை வழங்கி, விடுவித்துள்ளது என்று பிபிசி செய்தி கூறியுள்ளது.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.