2015-11-11 15:45:00

அமைதி ஆர்வலர்கள் - 1999ல் நொபெல் அமைதி விருது


நவ.11,2015. எல்லைகளற்ற மருத்துவர்கள்(Médecins Sans Frontières) என்ற அனைத்துலக மனிதாபிமான உதவி நிறுவனம், 1999ம் ஆண்டின் நொபெல் அமைதி விருதைப் பெற்றது. இந்த அரசு-சாரா(NGO) நிறுவனம், போரினால் பாதிக்கப்பட்டுள்ள மற்றும் தொற்று நோய்ப் பாதிப்புக்களை எதிர்நோக்கும் வளரும் நாடுகளில் ஆற்றி வரும் சிறப்பான பணிகளை அங்கீகரித்து இவ்விருது அதற்கு வழங்கப்பட்டது. இவ்வாறு நார்வே நொபெல் அமைதி விருதுக் குழுவில் ஒருவராகிய பேராசிரியர் Francis Sejersted அவர்கள், 1999ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி இவ்விருதை வழங்கி உரையாற்றியபோது தெரிவித்தார். இந்நிறுவனம், ஒவ்வோர் ஆண்டும் எண்பதுக்கு மேற்பட்ட நாடுகளுக்கு, 2,500க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், தாதியர் மற்றும் பிற நலவாழ்வுப் பணியாளர்களை அனுப்பி உதவி வருகின்றது. இயற்கைப் பேரிடரானாலும் சரி, மனிதாரல் உருவாகும் பேரிடரானாலும் சரி, நம்பிக்கையிழந்து துன்பநிலையில், பல்வேறு மனிதாபிமான உதவிகளை எதிர்நோக்கி இருக்கும் மக்கள் வாழும் இடங்களுக்கு இந்நிறுவன உறுப்பினர்கள் சென்று உதவுகின்றனர். இந்நிறுவனத்தினர் உதவும் இடங்களில் ஏறக்குறைய 15 ஆயிரம் பேர் இவர்களுடன் இணைந்து பணியாற்றுகின்றனர்.

Biafra குடியரசு என்று அதிகாரப்பூர்வப் பெயரைக் கொண்ட Biafra, தென்கிழக்கு நைஜீரியாவில் 1967ம் ஆண்டு மே 30ம் தேதி முதல் 1970ம் ஆண்டு சனவரி 15ம் தேதி வரை பிரிவினைவாத குடியரசாக தனித்து இயங்கியது. நைஜீரியாவில் பல்வேறு மக்களிடையே உருவான பொருளாதார, இன, கலாச்சார மற்றும் மதப் பதட்ட நிலைகளால் Igbo மக்களால் இந்தக் குடியரசு உருவானது. இதனால் நைஜீரிய-Biafra உள்நாட்டுச் சண்டை இடம்பெற்றது. Biafra குடியரசை, காபோன், ஹெய்ட்டி, ஐவரி கோஸ்ட், டான்சானியா ஆகிய நாடுகள் அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தன. ஆனால் இஸ்ரேல், பிரான்ஸ், இஸ்பெயின், போர்த்துக்கல், ரோடேஷியா, தென்னாப்ரிக்கா, வத்திக்கான் ஆகிய நாடுகள் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்காவிட்டாலும், தங்களின் ஆதரவையும் உதவிகளையும் வழங்கின. ஆயினும், இரண்டரை ஆண்டுகள் உள்நாட்டுப் போருக்குப் பின்னர் Biafra படைகள், நைஜீரிய இராணுவ அரசுடன் போர் நிறுத்தத்திற்கு உடன்பட்டன. இறுதியில் Biafra நைஜீரியாவுடன் இணைந்தது. இச்சண்டையில் இலட்சக்கணக்கான மக்கள் இறந்தனர்.

1967ம் ஆண்டு முதல் 1970ம் ஆண்டுவரை நடைபெற்ற இச்சண்டையின்போது புதிதாகக் குடியரசான Biafraவுக்கு நைஜீரிய இராணுவம் ஏற்படுத்திய பொருளாதாரத் தடைகளால் அக்குடியரசு மிகவும் துன்புற்றது. இந்நிலை உலகிற்குத் தெரியாமலே இருந்தது. அச்சமயத்தில் பிரான்ஸ் மட்டுமே Biafra மக்களுக்கு உதவியது. ப்ரெஞ்ச் செஞ்சிலுவை சங்கத்தோடு சேர்ந்து சில ப்ரெஞ்ச் மருத்துவர்கள் அங்கு சென்று Biafra மக்களுக்கு உதவினர். இவர்களுடன் தன்னார்வப் பணியாளர்களும் சென்றனர். இவ்வாறு சென்றவர்களில் பலர் நைஜீரிய இராணுவத்தால் தாக்கப்பட்டு இறந்தனர். பசியால் வாடினர். Biafra பிரிவினைவாதச் சண்டைக்குப் பின்னர், பிரான்ஸ் நாட்டின் ஒரு சிறு மருத்துவர்கள் மற்றும் பத்திரிகையாளர் குழுவால் 1971ம் ஆண்டில் பிரான்சில் Médecins Sans Frontières என்ற எல்லைகளற்ற அனைத்துலக மருத்துவர்கள் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. இனம், மதம், அரசியல் என்ற வேறுபாடின்றி அனைத்து மக்களும், தங்களின் தேசிய எல்லைகளைக் கடந்தும், மருத்துவ உதவிகள் பெறுவதற்கு உரிமையைக் கொண்டுள்ளனர் என்று கூறி இச்சிறிய குழு இந்த நிறுவனத்தை உருவாக்கியது. இந்நிறுவனத்தின் அனைத்துலக அலுவலகம் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவாவில் உள்ளது. இந்த MSF நிறுவனம், ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொருளாதார மற்றும் சமூக அவையில் ஆலோசனையாளர் என்ற பதவியையும் கொண்டுள்ளது. இந்நிறுவனத்தை ஆரம்பித்தவர்களில் ஒருவரான ப்ரெஞ்ச் மருத்துவர் Bernard Kouchner, பின்னாளில் ப்ரெஞ்ச் அரசியலில் உயர்ந்த பதவியில் இருந்தார்.

1972ம் ஆண்டில் நிக்கராகுவா நாட்டின் மானாகுவாவில் நிலநடுக்கம் ஏற்பட்டு அதில் முப்பதாயிரம் பேர் வரை இறந்தனர். MSF நிறுவனம் தனது முதல் மனிதாபிமானப் பணியை மானாகுவாவில் தொடங்கியது. 1975க்கும், 1979ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் தென் வியட்னாம் வட வியட்நாமின் கீழ் வந்தபோது கெமெர் ரூஜ் ஆட்சியிலிருந்து தப்பிப்பதற்காக இலட்சக்கணக்கான கம்போடியர்கள் தாய்லாந்து சென்றனர். இந்த MSF நிறுவனம் தாய்லாந்தில் முதல் புலம்பெயர்ந்தவர் முகாமை அமைத்தது. 1989ம் ஆண்டில் கம்போடியாவிலிருந்து வியட்நாம் ஆக்ரமிப்பை அகற்றியதற்குப் பின்னர் இந்நிறுவனம் கம்போடிய மக்களுக்கு நீண்ட கால மனிதாபிமான உதவிகளைச் செய்தது. ஏறக்குறைய எழுபது நாடுகளில் மருத்துவப் பயிற்சி மற்றும் நலவாழ்வு பயிற்சிகளை வழங்கி வருகிறது.  இந்நிறுவனம் உலகின் பல பகுதிகளில் MSF என்ற பெயராலேயே அறியப்படுகிறது. கானடாவிலும், அமெரிக்க ஐக்கிய நாட்டிலும் Doctors Without Borders என்று அழைக்கப்படுகிறது.

இந்நிறுவனத்தின் மருத்துவர்கள், தாதியர், பிற மருத்துவ வல்லுனர்கள், மருத்துவத் துறை தொழில்நுட்பப் பணியாளர்கள், தண்ணீர், நலவாழ்வுத்துறை பொறியியலாளர்கள் என முப்பதாயிரத்துக்கு மேற்பட்ட தன்னார்வப் பணியாளர்கள்  இந்த 2015ம் ஆண்டில் மட்டும் எழுபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் மருத்துவ உதவிகளை ஆற்றியுள்ளனர். இந்நிறுவனத்தின் பணிகளுக்கு ஆகும் செலவில் ஏறக்குறைய எண்பது விழுக்காடு, தனிநபர்கள்  வழங்கும் நன்கொடைகளிலிருந்து கிடைக்கிறது. எஞ்சிய செலவுகளை இதன் உறுப்பினர்கள் கொடுக்கின்றனர். MSF அரசு-சாரா அனைத்துலக நிறுவனத்திற்கு ஆண்டுக்கு ஏறக்குறைய 61 கோடி டாலர் தேவைப்படுகிறது. உலகில் எங்கெங்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுகின்றனவோ அங்கெல்லாம் இந்நிறுவனத்தினர் சென்று பணியாற்றுகின்றனர். எதிர்தரப்புக்களுக்கு இடையே உறவுகளை உருவாக்கவும் முயற்சித்து வருகின்றனர். அதேநேரம் இந்நிறுவனத்தினர் ஒவ்வொருவரின் பயமற்றதன்மை மற்றும் தியாக வாழ்வு, போர்கள் மற்றும் பேரிடர்களால் பாதிக்கப்படும் ஒவ்வொருவருக்கும் ஒரு மனித முகம் உள்ளது, அவர்களின் மாண்பு மதிக்கப்பட வேண்டும், அமைதி மற்றும் ஒப்புரவுக்கு அவர்கள் அழைக்கின்றனர் என்று காட்டுகிறது. எல்லைகளற்ற மருத்துவர்கள் என்ற அனைத்துலக மனிதாபிமான உதவி நிறுவனம், 1999ம் ஆண்டின் நொபெல் அமைதி விருதைப் பெற்றது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.