2015-11-10 14:43:00

ஒன்றிணைந்து நடக்கும் திருஅவைக்கு முயற்சி செய்யுங்கள்


நவ.10,2015. பிளாரன்ஸ் நகரில் தொடங்கியுள்ள இத்தாலிய கத்தோலிக்கத் திருஅவையின் ஐந்தாவது தேசிய மாநாட்டை முன்னிட்டு இத்திருத்தூதுப் பயணத்தை மேற்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இம்மாநாட்டில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகளை, பிளாரன்சின் Santa Maria del Fiore பேராலயத்தில் சந்தித்து உரையாற்றினார்.

இத்தாலியத் திருஅவையில் அடுத்த பத்தாண்டுகளுக்கு ஆயர்களும், பொது மக்களும் ஒன்றிணைந்து நடக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்றுரைத்த திருத்தந்தை, இந்தக் கனவுக்கு இன்று எப்படி செயலுருவம் கொடுப்பது என்று விளக்குவது என்னைச் சார்ந்தது அல்ல,  வரும் ஆண்டுகளில் இதைச் செயல்படுத்த உங்கள் அனைவரிடமும் ஒப்படைக்கிறேன் என்று கூறினார்.

ஒவ்வொரு சமூகமும், ஒவ்வொரு பங்குத்தளமும், ஒவ்வொரு நிறுவனமும், ஒவ்வொரு மறைமாவட்டமும், ஒவ்வொரு சூழலும் இந்தக் கனவைச் செயல்படுத்துவதற்கான சூழலை உருவாக்குமாறும், நற்செய்தியின் மகிழ்வை ஆழப்படுத்துமாறும்   கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

இத்தாலிய மறைமாவட்டங்களிலிருந்து 2,200 பிரதிநிதிகளும், 220 ஆயர்களும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் நீண்ட உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், விசுவாசத்தில் மிக மிகத் தொன்மை காலத்திலும், உறுதியான அடித்தளத்திலும் வேரூன்றிய மற்றும் நல்ல கனிகளைக் கொண்ட இத்தாலிய திருஅவை வயதுவந்த திருஅவை என்றும் தெரிவித்தார்.

Dante முதல் Michelangelo வரை மாபெரும் அறிஞர்களையும் கலைஞர்களையும் கொண்டிருக்கும் இத்தாலியர்களாகிய நீங்கள் உங்கள் திறமையில் நம்பிக்கை வைத்து கிறிஸ்தவத்தின் உன்னதத்தில் வளருமாறும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இச்செவ்வாயன்று மேற்கொண்ட இந்த ஒருநாள் திருத்தூதுப் பயணத்தில், இயேசு அறிவிப்பு பசிலிக்காவில் நண்பகலில் 33 நோயாளிகளைச் சந்தித்தார். பின்னர் அந்த வளாகத்தில் புனித பிரான்சிஸ் ஏழைகள் என்ற காரித்தாஸ் அமைப்பில் ஏழைகளுடன் மதிய உணவு அருந்தினார். மாலை 3.30 மணிக்கு மாநகராட்சி “Luigi Franchi” அரங்கத்தில் திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றினார்.    

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.