2015-11-10 15:08:00

இஸ்லாமியர்களாக மாற்றும் முயற்சியை சட்டமாக்குவதற்கு எதிர்ப்பு


நவ.10,2015. ஈராக் நாட்டில், இளையோரை இஸ்லாமியர்களாக மாற்றும் முயற்சியை சட்டமாக்குவதன் வழியே, பன்முக கலாச்சாரங்களையும், மதங்களையும் கொண்ட ஈராக் நாட்டின் ஒற்றுமை குலைந்துபோகும் என்று கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை முதலாம் லூயிஸ் சாக்கோ அவர்கள் கூறினார்.

மணமான தம்பதியரில் ஒருவர் இஸ்லாமிய மதத்தைச் சார்ந்தவர் என்றாலோ, அல்லது, இஸ்லாமிய மதத்திற்கு மாறியுள்ளார் என்றாலோ, அவர்களுக்குப் பிறக்கும் குழந்தை, இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர் என்று உடனடியாகப் பதிவு செய்யப்படும் என்று கூறும் இச்சட்டம், மனிதர்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்றான மதச் சுதந்திரத்தை நிராகரிக்கிறது என்று முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள், செய்தியாளர்களிடம் கூறினார்.

இளையோரை இஸ்லாமியராக மாற்றும் சட்டத்தை எதிர்த்து, நவம்பர் 10, இச்செவ்வாயன்று பல்வேறு சபைகளைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள், மற்றும் சமுதாய அக்கறை கொண்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் அமைப்பினர் இணைந்து, கல்தேய வழிபாட்டு முறை புனித ஜார்ஜ் ஆலயத்திற்கு முன்னர் போராட்டம் ஒன்றை நடத்தினர்.

மதத்தைப் பொருத்தமட்டில் எவ்வித கட்டாயமும் இருக்கக்கூடாது என்று சொல்லும் குரானின்  படிப்பினைகளுக்கு எதிராக இப்புதியச் சட்டம் அமைந்துள்ளது என்று, கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை சுட்டிக் காட்டியுள்ளார்.

இந்தச் சட்டம் ஈராக் பாராளுமன்றத்தில் மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோளை, முதுபெரும் தந்தை சாக்கோ அவர்களும், ஏனையத் தலைவர்களும் ஈராக் அரசுத் தலைவர், Fuad Masum அவர்களிடம் சமர்ப்பித்துள்ளதாக Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.