2015-11-09 15:38:00

திருப்பீடத்தின் ஆவணங்கள் திருட்டு, திருத்தந்தை வருத்தம்


நவ.09,2015.  திருப்பீடத்தின் பாதுகாப்பில் இருந்த ஆவணங்களில் சில, வத்திக்கானில் பணியாற்றும் இருவரால் திருடப்பட்டு, அவை நூல்களாக வெளியானது குற்றம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறு வழங்கிய மூவேளை செப உரையின் இறுதியில் வருத்தத்தோடு குறிப்பிட்டார்.

வத்திக்கான் நிதி நிலைமை குறித்தும், திருப்பீட அதிகாரிகள் சிலரின் செலவு விவரங்கள் குறித்தும் திருப்பீடத்திற்குள் பரிமாறப்பட்ட இரகசிய ஆவணங்களைத் திருடி விற்ற இரு வத்திக்கான் பணியாளர்கள், நவம்பர் 2, கடந்த திங்களன்று காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். 

மக்களை வருத்தத்தில் ஆழ்த்தும் வண்ணம், இந்தத் தவறானச் செயலில் ஈடுபட்டவர்களையும், அந்த இரகசியத் தகவல்களை, பொறுப்பின்றி நூல் வடிவில்  வெளியிட்டவர்களையும் கண்டித்தத் திருத்தந்தை, இத்தகையச் செயல்களால் மனம் தளராமல், வத்திக்கானில் துவக்கப்பட்டுள்ள சீரமைப்புப் பணிகள் தடையின்றி தொடரும் என்று உறுதி கூறினார்.

திருத்தந்தையின் இக்கூற்றுக்களைச் செவிமடுத்தபோது, வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கானோர், திருத்தந்தைக்கு ஆதரவு தரும் வகையில் ஆரவாரமாக கரவொலி எழுப்பினர் என்று, ஆசிய செய்தி கூறுகிறது.

திருப்பீடத்தில் துவக்கப்பட்டுள்ள சீரமைப்புப் பணிகள், எத்தனை இடர்கள் வந்தாலும், தொடர்ந்து நடைபெறுவதற்கு தனக்கும், தன் உடன் உழைப்பாளர்களுக்கும் செபிக்குமாறு திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.

மூவேளை செப உரையின் இறுதியில், தான் நவம்பர் 10, இச்செவ்வாயன்று, பிளாரன்ஸ் நகருக்கு மேற்கொள்ளவிருக்கும் மேய்ப்புப்பணி பயணம் குறித்து வளாகத்தில் கூடியிருந்தோருக்கு அறிவித்தார், திருத்தந்தை.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.