2015-11-09 15:27:00

திருத்தந்தையுடன் போலந்து அரசுத் தலைவர் சந்திப்பு


நவ.09,2015. போலந்து அரசுத் தலைவர் Andrzej Duda அவர்கள், இத்திங்களன்று காலை திருப்பீடத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை சந்தித்து உரையாடினார்.

20 நிமிடங்கள் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது பல்வேறு விடயங்கள் குறித்த கருத்துக்கள் பரிமாறப்பட்டபின், அமைதியின் மரம் பொறிக்கப்பட்ட பதக்கம் ஒன்றும், தன் அண்மை சுற்றுமடலான Laudato Si என்பதன் பிரதி ஒன்றையும் பரிசளித்தார் திருத்தந்தை.

தனக்காகச் செபிக்கும்படி கேட்டு, செஸ்டகோவா கறுப்பு அன்னையின் திருஉருவத்தை அரசுத்தலைவர், திருத்தந்தைக்குப் பரிசளிக்க, அதனைப் பெற்றுக்கொண்ட திருத்தந்தை, போலந்து அரசுத் தலைவரிடம், தனக்காக செபிக்க மறக்கவேண்டாம் என இறுதியில் விண்ணப்பித்தார்.

திருத்தந்தையைச் சந்தித்த பின், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களையும், பன்னாட்டு உறவுகள் திருப்பீடச் செயலகத்தின் நேரடிச் செயலர் அருள்பணி Antoine Camilleri ஆகியோரையும் சந்தித்து உரையாடினார், போலந்து அரசுத்தலைவர் Duda.  

போலந்தில் திருஅவை ஆற்றிவரும் சிறப்புப் பணிகள், வரவிருக்கும் உலக இளைஞர் தினத்தில் பங்குகொள்ள, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், போலந்து நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளது, குடும்பங்களுக்காக உழைத்தல், ஏழைகளுக்கு உதவுதல், குடிபெயர்வோரை வரவேற்றல், உக்ரைனின் மோதல்கள், மத்தியக் கிழக்குப் பகுதியின் அமைதி போன்றவை குறித்தும் இச்சந்திப்பில் விவாதிக்கப்பட்டன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.