2015-11-07 16:28:00

'ஹையான்' சூறாவளி நிவாரணத்தில் ஈராண்டுகளாக காரித்தாஸ்


நவ.07,2015. 2013ம் ஆண்டு, நவம்பர் 8ம் தேதி பிலிப்பின்ஸ் நாட்டை தாக்கி, பெருமளவு அழிவை உருவாக்கிய 'ஹையான்' சூறாவளியின் இரண்டாம் ஆண்டு நிறைவையொட்டி, அந்நாட்டில் காரித்தாஸ் மேற்கொண்ட பணிகளைப் பற்றிய அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் நேரடியாகச் சென்றடைவதிலும், செய்யப்பட்ட உதவிகள் மக்களிடையே சமமாகப் பகிர்ந்தளிக்கப்படுவதிலும் காரித்தாஸ் விழிப்புடன் செயல்பட்டதேன்று, பிலிப்பின்ஸ் காரித்தாஸ் பொதுச் செயலர், அருள்பணி Edwin Gariguez அவர்கள் கூறினார்.

உலகின் பல பகுதிகளிலும் இயங்கிவரும் 43 காரித்தாஸ் அமைப்புக்கள், ஹையான் புயல் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டன என்றும், இதுவரை, காரித்தாஸ் வழியே மக்களைச் சென்றடைந்துள்ள உதவித் தொகை, 24.4 மில்லியன் யூரோ, அதாவது, 173 கோடியே, 24 இலட்சம் ரூபாய் மதிப்புள்ளது என்றும் இவ்வறிக்கை தெரிவிக்கிறது.

இந்த உதவியால் பயனடைந்தவர்கள் 9 இலட்சத்து 55 ஆயிரம் பேர் என்றும், காரித்தாஸ் அமைப்பின் பணிகள் 2016ம் ஆண்டும் தொடரும் என்றும் இவ்வறிக்கை மேலும் கூறுகிறது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.