2015-11-06 16:26:00

ஹாலந்து நாட்டு நாளிதழுக்கு திருத்தந்தை அளித்துள்ள பேட்டி


நவ.06,2015. ஒருவர் வறுமைப் பற்றி வார்த்தைகளால் பேசிவிட்டு, அதேவேளையில், பாரவோனைப் போல ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தால் அது தவறு என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஹாலந்து நாட்டு நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

ஹாலந்து நாட்டின் Utrecht நகரில், வீடற்றோர் சார்பில் வெளியிடப்படும் Straatnieuws, அதாவது, 'ஒரு வீதி நாளிதழ்' என்ற பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் தன் தனிப்பட்ட வாழ்வு, தன் வாழ்வின் கனவுகள், வறியோர் மீது தான் கொண்டுள்ள அன்புக்குக் காரணமான தன் வாழ்வு அனுபவங்கள் என்று பல கருத்துக்களில் பேட்டியளித்துள்ளார்.

வறியோர் மீது திருத்தந்தை கொண்டுள்ள அன்புக்கு காரணம் என்ன என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்தத் திருத்தந்தை, தான் பிறந்து வளர்ந்த இல்லத்தில் பணியாற்றிய ஓர் ஏழைப்பெண் தன்னிடம் அதிக மரியாதையை உருவாக்கினார் என்று கூறியதுடன், அப்பெண் தனக்கு வழங்கிய திரு இருதய ஆண்டவர் உருவத்தை தான் இன்னும் வைத்திருப்பதாகக் கூறி, அந்த உருவத்தை, பேட்டி கண்டவர்களிடம் காண்பித்தார்.

பொதுவாழ்வில் ஈடுபடுவோருக்கு, ஊழல் செய்யும் சோதனைகள் அதிகம் என்பதை எடுத்துரைத்தத் திருத்தந்தை, இந்தச் சோதனைகளுக்கு கத்தோலிக்கத் திருஅவை இடம்கொடுத்தால், அதன் சாட்சிய வாழ்வு பொய்யாகிப் போகும் என்று குறிப்பிட்டார்.

வத்திக்கான் சொத்துக்களை விற்கும் சோதனை, திருத்தந்தைக்கு ஏற்பட்டுள்ளதா என்ற கேள்விக்குப் பதில் அளித்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கானுக்கோ, திருஅவைக்கோ சொத்துக்கள் என்று ஏதுமில்லை, அவை மனித சமுதாயத்திற்கு உரித்தான சொத்துக்கள் என்று கூறியதோடு, தனக்கு வந்துசேரும் பரிசுகளை விற்று, அவற்றை தர்மப்பணிகளுக்குச் செலவழிப்பதைச் சுட்டிக்காட்டினார்.

தன்னை வந்தடைந்துள்ள புகழ், நிலையற்ற நீர்க்குமிழி போன்றது என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, அடுத்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு, தன்னை மக்கள் நினைவில் வைத்திருப்பார்களா என்பது சந்தேகம்தான் என்பதையும் இந்தப் பேட்டியில் குறிப்பிட்டார்.

உலகின் 35 நாடுகளில் வெளியாகும் 113 தெரு நாளிதழ்களின் கூட்டமைப்பில் ஒன்று, ஹாலந்து நாட்டில் இயங்கிவரும் "Straatniuws". இந்த நாளிதழ்கள், ஒவ்வொருநாளும் பல்லாயிரக் கணக்கான வீடற்றவர்களால் விற்கப்பட்டு, அதன் பலனை அவர்கள் பெறுகின்றனர் என்று இந்த கூட்டமைப்பு கூறியுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.