2015-11-06 16:14:00

வாழ்வுக்கு ஆதாரமான அமைப்பிற்கு திருத்தந்தையின் வாழ்த்து


நவ.06,2015. கருவிலிருந்து, இயற்கையாக வரும் மரணம் முடிய நிகழும் வாழ்வுக்கு ஆதாரமாக செயலாற்றும் அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்களை வாழ்த்துவதாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தெரிவித்தார்.

‘வாழ்வுக்கு உதவும் மையங்கள்’ என்ற பெயருடன் இத்தாலியில் இயங்கிவரும் ஓர் அமைப்பைச் சார்ந்தவர்கள், நவம்பர் 6, இவ்வெள்ளி முதல், 8, இஞ்ஞாயிறு முடிய உரோம் நகரில் நடத்தும் 35வது ஆண்டுக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்திருக்கும் 500க்கும் அதிகமான உறுப்பினர்களை, இவ்வெள்ளி காலையில் திருப்பீடத்தில் சந்தித்து தன் வாழ்த்துக்களை வழங்கியபோது, திருத்தந்தை இவ்வாறு கூறினார்.

நீங்கள் ஆற்றுவது சாதாரண சமுதாயப் பணி அல்ல என்று கூறியத் திருத்தந்தை, காயப்பட்ட மனித வாழ்வைக் குணமாக்க முயன்ற இயேசுவின் சீடர்களைப் போல இவ்வமைப்பினர் ஆற்றும் பணியும் அமைந்துள்ளது என்று குறிப்பிட்டார்.

இவ்வுலகப் பயணத்தில் செல்லும் மனிதர்களிடமிருந்து வாழ்வைப் பறிப்பதற்கு பல கொள்ளையர்கள் காத்திருக்கின்றனர் என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, இவ்வுலகப் பயணத்தில் வறியோர் தங்கள் உடைமைகளை மட்டுமல்ல, தங்கள் மாண்பையும் பறிகொடுத்து பயணிக்கின்றனர் என்று எடுத்துரைத்தார்.

கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் வாழ்வுக்கு ஆதரவான இவ்வமைப்பைச் சேர்ந்தவர்கள், வழியில் அடிபட்டு கிடந்தவருக்கு உதவிகள் செய்த நல்ல சமாரியரைப் போல ஆற்றிவரும் பணிகளில் மனம் தளரவேண்டாம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வமைப்பைச் சார்ந்தவர்களிடம் விண்ணப்பித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.