2015-11-06 16:19:00

மரணதண்டனைக்கு எதிராக எப்போதும் குரல் கொடுப்பேன்-பான் கி மூன்


நவ.06,2015. மரணதண்டனைக்கு எதிராகக் குரல் கொடுப்பதை தான் ஒருபோதும் நிறுத்தப்போவதில்லை என்று, ஐ.நா. பொதுச் செயலர், பான் கி மூன் அவர்கள் கூறினார்.

"மரணதண்டனையை விட்டு விலகுதல்: கருத்துக்களும், கண்ணோட்டங்களும்" என்ற தலைப்பில், ஐ.நா. மனித உரிமைகள் அவை உருவாக்கியுள்ள ஒரு நூலை, நவம்பர் 5, இவ்வியாழனன்று வெளியிட்ட பான் கி மூன் இவ்வாறு கூறினார்.

வறுமைப்பட்டோர், மனநலம் குன்றியோர், சிறுபான்மை சமுதாயத்தினர் ஆகியோர் தங்கள் உரிமைகளை நிலைநாட்டும் வாய்ப்பு ஏதும் அளிக்கப்படாமல், மரணதண்டனை பெறுவது முற்றிலும் தவறானது என்று, பான் கி மூன் அவர்கள், இந்த வெளியீட்டு விழாவில் உரையாற்றினார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டில் மரணதண்டனை பெற்று, 8 ஆண்டுகள், 10 மாதங்கள், 19 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டு, DNA சோதனைகளின் விளைவாக, குற்றமற்றவர் என்று விடுவிக்கப்பட்ட, Kirk Bloodsworth என்பவர், இந்நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார்.

தான் மரணதண்டனையிலிருந்து தப்பித்தது, ஒரு பெரும் புதுமையே தவிர, அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்ட எந்த முயற்சியும் அல்ல என்றும், தன்னைப்போல் குற்றமற்றவர்கள் பல்லாயிரம் பேர் மரணதண்டனையை எதிர்நோக்கியிருப்பது மனவேதனையைத் தருகிறது என்றும் Bloodsworth அவர்கள் கூறினார். 

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.