2015-11-06 16:27:00

உரோம் 'நகரத்திற்கு ஒரு மடல்' - கர்தினால் வல்லினி


நவ.06,2015. நவம்பர் 9, இத்திங்களன்று கொண்டாடப்படும் புனித இலாத்தரன் பசிலிக்காப் பேராலய அர்ச்சிப்புத் திருநாளையொட்டி, உரோம் மறைமாவட்டத்தில், திருத்தந்தையின் சார்பில் ஆயராகப் பணியாற்றும் கர்தினால் அகோஸ்தினோ வல்லினி அவர்கள் 'நகரத்திற்கு ஒரு மடல்' என்ற சுற்றறிக்கையை, நவம்பர் 5, இவ்வியாழன் மாலை வெளியிட்டார்.

உரோம் மறைமாவட்டத்தின் பேராலயம் என்று கருதப்படும் புனித ஜான் இலாத்தரன் பசிலிக்காவின் முக்கியத் திருநாளையொட்டி கர்தினால் வல்லினி அவர்கள் வெளியிட்டுள்ள இந்த மடலில், உரோம் தலத்திருஅவை ஆற்றக்கூடிய பணிகள் குறித்து விளக்கப்பட்டுள்ளது.

பழைய, புதிய வடிவங்களில் நிலவும் வறுமை, அன்னியரை வரவேற்றல், கல்வி, தொடர்புகள், மற்றும் எதிர்காலத் தலைமுறையினரை பொறுமையுடன் உருவாக்குதல் ஆகிய சவால்கள், உரோம் நகர் வாழும் கத்தோலிக்கர் தற்போது சந்திக்கும் சவால்கள் என்று கர்தினால் வல்லினி அவர்கள் தன் மடலில் குறிப்பிட்டுள்ளார்.

கருணை என்ற உணர்வு  குறைந்துவரும் இன்றைய நாட்களில், கருணையின் வடிவங்களாக உரோம் தலத்திருஅவை மக்கள் விளங்கவேண்டும் என்ற அழைப்புடன், கர்தினால் வல்லினி அவர்கள், இந்த மடலை நிறைவு செய்துள்ளார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.