2015-11-05 14:43:00

சிறுபான்மையினருக்கு சார்பாக முஸ்லிம் இளையோர் உறுதிமொழி


நவ.05,2015. பாகிஸ்தானில் வாழும் சிறுபான்மையினருக்கு எதிராக, அந்நாட்டில் நிலவும் தவறான முற்சார்பு எண்ணங்களை முடிவுக்குக் கொணர, 500க்கும் அதிகமான முஸ்லிம் இளையோர் லாகூர் நகரில் கூடிவந்தனர்.

பாகிஸ்தானில் செயலாற்றிவரும் அரசு சாரா அமைப்பான "Bargad", பாகிஸ்தான் இளையோரிடையே சகிப்புத்தன்மை, ஒப்புரவு ஆகிய விழுமியங்களை வளர்க்கும் கல்வியைப் புகட்ட பாடுபட்டு வருகிறது.

"Bargad" அமைப்பின் ஒரு முயற்சியாக, அண்மையில் லாகூரில் கூடிவந்த முஸ்லிம் இளையோர், கிறிஸ்தவர்களை இழிவுபடுத்தும் வகையில் பயன்படுத்தப்படும் "Isai" என்ற வார்த்தையை இனி பயன்படுத்துவதில்லை என்றும், அதற்குப் பதிலாக, கிறிஸ்தவர்கள் 'மேசியாவின் மக்கள்' என்பதைக் குறிக்கும் "Masih" என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதாகவும் உறுதி மொழி எடுத்தனர்.

தாங்கள் எடுத்துக்கொண்ட உறுதிமொழியின் பொருளை, இன்னும் 100 இளையோரிடம் தாங்கள் பகிர்ந்துகொள்ளப் போவதாகவும் இவ்விளையோர் உறுதி பூண்டனர் என்று Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

இளையோரிடம் இத்தகைய மனநிலையை உருவாக்குவது, பாகிஸ்தானை எதிர்காலத்தில் அமைதிப் பாதையில் வழிநடத்தும் என்றும், நல்ல மாற்றங்களை உருவாக்க இளையோரே சரியான தூதர்கள் என்றும், "Bargad" அமைப்பின் இயக்குனர், Sabiha Shaheen அவர்கள் கூறினார்.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.