2015-11-05 14:35:00

கத்தோலிக்கரிடம் இந்தோனேசிய மக்கள் கற்றுக்கொள்ள வேண்டும்


நவ.05,2015. திருமண வாழ்வுக்கு தகுந்த முறையில் தங்களையே தயாரிக்கும் வழிமுறைகளை, கத்தோலிக்கத் திருஅவையிடமிருந்து இந்தோனேசிய மக்கள் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று, அந்நாட்டின் அமைச்சர் Lukman Hakim Saifudin அவர்கள் கூறினார்.

நவம்பர் 2ம் தேதி முதல், 6ம் தேதி முடிய, ஜகார்த்தாவில் இந்தோனேசிய ஆயர் பேரவையால் நடத்தப்படும் ஒரு தேசிய கருத்தரங்கில், சமய விவகாரங்கள் துறையின் அமைச்சர் Saifudin அவர்கள் உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.

"இந்தோனேசியாவின் பன்முக சமுதாயத்தில் கத்தோலிக்கக் குடும்பங்கள்" என்ற தலைப்பில் நடைபெற்றுவரும் இக்கருத்தரங்கில், கத்தோலிக்கக் குடும்பங்கள் நற்செய்தியின் நம்பிக்கை என்ற கருத்தில் கருத்துக்கள் பரிமாற்றப்படுகின்றன என்று ஆசிய செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

இன்றைய உலகில் கல்விபுகட்டும் உன்னதப் பணியை, பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மட்டும் ஆற்றுவதில்லை, மாறாக, இவ்வுலகின் தொடர்பு சாதனங்களும் ஆற்றுகின்றன என்பதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர் Saifudin அவர்கள், இளையோரை தவறான வழிகளிலிருந்து காப்பதற்கு, குடும்பங்களும், சமய நிறுவனங்களும் உதவி செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.