2015-11-05 14:07:00

இரத்தம் சிந்தும் கொடுமை, கிறிஸ்தவர்களை ஒருங்கிணைக்கிறது


நவ.05,2015. கிறிஸ்துவுக்குச் சாட்சிகளாக வாழ்வதால் இரத்தம் சிந்தும் கொடுமைக்கு உள்ளாக்கப்படும் நிலை, உலகெங்கும் பரவியிருக்கும் கிறிஸ்தவர்களை ஒருங்கிணைக்கும் அடித்தளம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

கிறிஸ்தவ ஒன்றிப்பு திருப்பீட அவை, அல்பேனியாவின் தலைநகர் திரானாவில் நடத்திய உலக கிறிஸ்தவ அமைப்பின் கலந்துரையாடல் முயற்சிக்கு திருத்தந்தை அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு கூறினார்.

கத்தோலிக்கர், ஆர்த்தடாக்ஸ், புராட்டஸ்டன்ட், ஆங்கிலிக்கன், எவாஞ்செலிகல், பெந்தகோஸ்தல் என்று பலவாறாகப் பிரிந்துள்ள கிறிஸ்தவ உலகம், கிறிஸ்துவுக்காக இரத்தம் சிந்துதலில் உறுதியாக இணைக்கப்பட்டுள்ளது என்று, கிறிஸ்தவ ஒன்றிப்பு திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் கர்ட் கோச் (Kurt Koch) அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள திருத்தந்தையின் செய்தி சுட்டிக்காட்டுகிறது.

கிறிஸ்தவ உலகம் சந்தித்துவரும் பிரச்சனைகளுக்கு கத்தோலிக்கத் திருஅவை தீர்வுகளைத் தேடிவருகிறது என்பதை, "பாகுபாடுகள், சித்ரவதைகள், மறைசாட்சியம்: கிறிஸ்துவைத் தொடர்தல்" என்ற தலைப்பில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடல் எடுத்துக்காட்டுகிறது என்று திருத்தந்தை தன் செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.