2015-11-04 15:36:00

வேற்றினத்தார் அச்சம், பாகுபாடுகள் குறித்து பேராயர் அவுசா


நவ.04,2015. வேற்றினத்தார் மீது நாம் கொள்ளும் அர்த்தமற்ற பயமும், அதன் விளைவாக காட்டப்படும் பாகுபாடுகளும் அனைத்துலக சமுதாயத்தை உருவாக்குவதற்கு பெரும் தடைகளாக உள்ளன என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

நியூ யார்க் நகரில், ஐ.நா. பொதுஅவையின் 70வது அமர்வு நடைபெற்றுவரும் இந்நாட்களில், இவ்வமர்வில் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளராகப் பங்கேற்றுவரும் பேராயர், பெர்னதித்தோ அவுசா அவர்கள், இச்செவ்வாயன்று வழங்கிய உரையில் இவ்வாறு கூறினார்.

இனவேற்றுமை, வேற்றினத்தார் மீது அச்சம், பாகுபாடுகள் மற்றும் சகிப்புத்தன்மையற்ற நிலை என்ற கருத்தில் ஐ.நா.அவையில் நடைபெற்ற பொது அமர்வில், உலகெங்கும் பரவிவரும் வன்முறைகளின் அடிப்படை காரணம் நாம் வளர்த்துக்கொள்ளும் அச்சமும், சகிப்பற்றத் தன்மையுமே என்று பேராயர் அவுசா அவர்கள் தன் உரையில் வலியுறுத்தினார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில், உலகின் 15 நாடுகளில் மோதல்கள் உருவாகியுள்ளன என்றும், இதனால், 2010ம் ஆண்டு, 11,000 பேர் ஒவ்வொரு நாளும் புலம்பெயர்ந்துவந்த நிலை மாறி, தற்போது, ஒவ்வொரு நாளும் 42,500 பேர் புலம்பெயரும் கட்டாயத்திற்கு உள்ளாக்கப்படுகின்றனர் என்று பேராயர் அவுசா அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

உலகெங்கும் தற்போது புலம்பெயர்ந்து வாழும் மக்களின் எண்ணிக்கை 6 கோடிக்கும் அதிகம் என்று கூறிய பேராயர் அவுசா அவர்கள், இம்மக்களை எண்ணிக்கைகளாகப் பார்க்காமல், ஒவ்வொருவரையும் தனி மனிதர்களாக பார்க்கும்போது மட்டுமே இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காணமுடியும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறிய வார்த்தைகளை, தன் உரையில் சிறப்பாகக் குறிப்பிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.