2015-11-04 15:22:00

இறைவா உமக்கேபுகழ்: சிலிக்கன் பள்ளத்தாக்கிலிருந்து பாரிஸூக்கு


நவ.04,2015. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதியுள்ள 'இறைவா உமக்கே புகழ்' என்ற திருமடல், நமது பொதுவான இல்லம் குறித்தும், அங்கு நாம் ஆற்றக்கூடிய மாற்றங்கள் குறித்தும் பேசுகிறது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டில் பயணம் மேற்கொண்டுள்ள திருப்பீட நீதி, அமைதி அவைத் தலவைர், கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள், இயேசு சபையினர் நடத்திவரும் சாந்தா கிளாரா பல்கலைக் கழகத்தில், இச்செவ்வாயன்று ஆற்றிய உரையில் இவ்வாறு கூறினார்.

இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த சாந்தா கிளாரா பல்கலைக் கழகத்தின் தலைவர், இயேசு சபை அருள்பணி, மைக்கிள் எங்க் (Michael Engh, S.J.) அவர்கள், கர்தினால் டர்க்சன் அவர்களின் உரையைக் கேட்க மாணவர்களும் ஆசிரியரும் மிகுந்த ஆவல் கொண்டுள்ளனர் என்றும், திருத்தந்தை இத்திருமடல் வழியே விடுக்கும் சவால்களுக்கு பதிலிறுக்க அனைவரும் ஆர்வம் கொண்டுள்ளனர் என்றும் கூறினார்.

"இறைவா உமக்கே புகழ்: ‘சிலிக்கன்’ பள்ளத்தாக்கிலிருந்து பாரிஸ் மாநகரத்திற்கு" என்ற தலைப்பில் கர்தினால் டர்க்சன் அவர்கள் வழங்கிய உரையில், அமெரிக்க ஐக்கிய நாடும், குறிப்பாக, கலிபோர்னியா மாநிலத்தில் கணணி தொழில்நுட்பத்திற்கு பேர்போன ‘சிலிக்கன்’ பள்ளத்தாக்கும், அதிலும் சிறப்பாக, கத்தோலிக்க விழுமியங்களை உயர்த்திப்பிடிக்கும் சாந்தா கிளாரா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்தவர்களும் நமது பொதுவான இல்லமான இந்த பூமியை எவ்விதம் காப்பாற்ற முடியும் என்பதை விளக்கிக் கூறினார்.

சுற்றுச்சூழல் அழிவு என்பது, அனைவரையும் சார்ந்த ஓர் ஆபத்து என்பதை நாம் அனைவரும் முதலில் உணர்ந்து, ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை தன் உரையில் வலியுறுத்திய கர்தினால் டர்க்சன் அவர்கள், இந்தப் பிரச்சனையை மூடி மறைக்காமல், உண்மையான, திறந்த மனதோடு உரையாடலில் ஈடுபட அனைவரும் முன்வரவேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.