2015-11-03 15:03:00

விவிலியத் தேடல் – பெரிய விருந்து உவமை – பகுதி - 5


இயேசுவின் மனித இயல்பை வெளிப்படுத்தும் பல நிகழ்வுகள், நற்செய்திகளில் இடம்பெற்றுள்ளன. இலாசரின் கல்லறைக்கருகே, இயேசு "கண்ணீர் விட்டு அழுதார்" என்ற வார்த்தைகளை யோவான் நற்செய்தியில் (11:35) காண்கிறோம். ஆனால், இயேசு வாய்விட்டுச் சிரித்தார் என்றோ, புன்முறுவல் பூத்தார் என்றோ எந்த நற்செய்தியும் வார்த்தைகளால் சொல்லவில்லை. ஆனால், இயேசு கட்டாயம் சிரித்திருப்பார் என்பதை நாம் அறிவோம். எடுத்துக்காட்டாக, "சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள்" என்று இயேசு கூறிய நிகழ்வு, மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூன்று நற்செய்திகளிலும் பதிவாகியுள்ளது. (காண் - மத். 19:13-15; மாற். 10:13-16; லூக். 18:15-17). இந்நிகழ்வில், இயேசு நிச்சயம் அக்குழந்தைகளுடன் ஆடி, பாடி, சிரித்து மகிழ்ந்திருப்பார் என்று சொல்லமுடியும்.

அதேபோல், இயேசுவின் கூற்றுகளை அலசிப் பார்க்கும்போது, அவற்றில், சாந்தமான மனநிலையோடு சொல்லப்பட்ட வார்த்தைகளைக் காணலாம்; கோபம்தொனிக்கும் கடினமான வார்த்தைகளைக் காணலாம்; வருத்தத்தில் சொல்லப்பட்ட வார்த்தைகளைக் காணலாம். நகைச்சுவையாக இயேசு சொன்ன வார்த்தைகள், நற்செய்தியில் கூறப்படவில்லை.

இயேசு சிரிக்கவில்லை, நகைச்சுவையாகப் பேசவில்லை என்ற எண்ணங்களை இன்று நாம் பேசுவதற்குக் காரணம் உள்ளது. 'பெரிய விருந்து உவமை' என்று லூக்கா நற்செய்தி 14ம் பிரிவில் (லூக். 14:16-24) இயேசு கூறிய இந்தக் கதையைக் கேட்டவர்களில் பெரும்பாலானோர் பரிசேயர்கள். இவர்கள், இவ்வுவமையைக் கேட்டதும், இயேசு நகைச்சுவையாக ஏதோ ஒன்றைக் கூறுகிறார் என்று எண்ணிச் சிரித்திருப்பர். பரிசேயர்களைப் பொருத்தவரை, இயேசு கூறிய இவ்வுவமை எள்ளளவும் எண்ணிப்பார்க்க முடியாத ஒரு கற்பனைக் கதை. விருந்து நேரத்தில் எதையாவது பேசி பொழுதைக் கழிப்பதற்காக இயேசு கூறிய நகைச்சுவைக் கதை என்று அவர்கள் எண்ணியிருக்கவேண்டும்.

இயேசுவின் எண்ணங்கள் வேறுபட்டிருந்தன. அவரைப் பொருத்தவரை, பரிசேயர் தலைவர் வீட்டுக்குள் அவர் நுழைந்ததிலிருந்து, அங்கிருந்தோரின் எண்ணங்களை, கண்ணோட்டங்களை தலைகீழாகப் புரட்டிப்போடுவதே, இயேசுவின் முக்கிய நோக்கமாக இருந்ததென்பதை உணரலாம். அந்தப் 'புரட்டிப்போடுதல்' பணியின் உச்சக்கட்டமாக, இயேசு 'பெரிய விருந்து உவமை'யைச் சொன்னார் என்றும் நாம் நம்பலாம்.

விருந்துக்கு வந்த இடத்தில், நோயுற்ற ஒருவரை, ஓய்வுநாளன்று குணமாக்கியது, இயேசு செய்த முதல் 'புரட்டிப் போடுதல்' நிகழ்ச்சி. பின்னர், விருந்துக்கு வந்தவர்களிடமும், விருந்து கொடுத்தவரிடமும் பணிவைப்பற்றி, பரந்த மனதைப்பற்றி பாடங்கள் சொல்லித்தந்தது அடுத்தப் 'புரட்டிப் போடுதல்' நிகழ்ச்சி.

பரிசேயர் தலைவர் வீட்டில், விருந்து என்ற பெயரில், இயேசுவுக்கு ஒரு சோதனைக்களம் உருவாக்கப்பட்டிருந்தது. அச்சோதனைக்களத்தில் இயேசு இறங்கியதிலிருந்து, அவருக்கு அல்ல, அவரைச் சூழ்ந்திருந்தவர்களுக்கு சோதனைகள் ஆரம்பமாயின என்று சொல்வதே பொருத்தம்.

நீர்க்கோவை நோயுள்ள ஒருவரை இயேசு குணமாக்கியபின், அங்கிருந்தோர் முன் அவர் வைத்த கேள்வி, பெரும் சோதனை: "உங்களுள் ஒருவர் தம் பிள்ளையோ மாடோ கிணற்றில் விழுந்தால் ஓய்வுநாள் என்றாலும் அதனை உடனே தூக்கிவிடமாட்டாரா?" (லூக். 14:5) என்று இயேசு கேட்டார்.

ஓய்வுநாள் என்றாலும், கிணற்றில் விழுந்த தங்கள் பிள்ளையைத் தூக்கிவிடுவர் பரிசேயர்கள். இரத்தப் பாசம், ஓய்வுநாள் விதிகளை ஒதுக்கிவிடும். கிணற்றில் விழுந்த மாட்டைத் தூக்கிவிடுவர். ஏனெனில், அது வாயில்லா ஜீவன் என்றோ, அதுவே தங்கள் வாழ்வின் வருமானம் என்றோ காரணம் சொல்லலாம். இரத்தப் பாசம், பொருளாதாரம் என்ற காரணங்களுக்காக ஓய்வுநாள் நியதிகளை மீறி, கருணை காட்டலாம் என்றால், அந்தக் கருணையை அனைவர்மீதும் காட்டுவதில் என்ன தவறு என்பதையே இயேசு இக்கேள்வியின் மூலம், அவர்கள் முன் சவாலாக வைத்தார். இயேசுவின் இக்கேள்விக்கு "பதில் சொல்ல அவர்களால் இயலவில்லை" (லூக்.14:6) என்று லூக்கா நற்செய்தி சொல்கிறது.

பரிசேயர் இல்லத்தில் இருந்தவர்களுக்கு இயேசு கொடுத்த அடுத்தச் சோதனை: பணிவைப் பற்றிய பாடங்கள். விருந்தில் முதலிடம் தேடாதீர்கள் என்று, விருந்துக்கு வந்தவர்களுக்கு அறிவுரை வழங்கினார் இயேசு. "நீர் விருந்து அளிக்கும்போது ஏழைகளையும் உடல் ஊனமுற்றோரையும் கால் ஊனமுற்றோரையும் பார்வையற்றோரையும் அழையும்" (லூக். 14:13) என்று, தன்னை விருந்துக்கு அழைத்தவருக்குப் பாடம் சொல்லித் தந்தார். பரிசேயர் இல்லத்தில் கூடியிருந்தவர்கள் பணிவும், கனிவும் கொண்டிருந்தால்மட்டுமே அவர்கள் இறையரசில் நுழையமுடியும் என்ற மறைமுகமான எச்சரிக்கைகளை இயேசு விடுத்தார். இயேசு கூறிய இந்தப் பணிவுப் பாடங்களை சூழ இருந்தவர்கள் புரிந்திருப்பார்களா என்பது சந்தேகம்தான்.

இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட இஸ்ரயேல் குலத்தில் பிறந்திருந்தால் போதும், மோசேயின் சட்டங்களை நுணுக்கமாகக் கடைபிடித்தால் போதும்; தங்களுக்கு இறையாட்சி விருந்தில் இடம் கிடைக்கும் என்று எண்ணியிருந்த பரிசேயர்கள், இயேசு விடுத்த இந்த எச்சரிக்கையைப் புரிந்துகொண்டதுபோல் தெரியவில்லை. அல்லது, புரிந்துகொண்டிருந்தாலும், அவற்றை ஏற்கத் தயாராக இல்லை. இயேசு சொன்னவற்றை நகைச்சுவையென ஒதுக்கித் தள்ள அவர்கள் முயன்றனர். அவர்கள் முயற்சிகளுக்கு வார்த்தைவடிவம் கொடுக்க, பந்தியில் அமர்ந்திருத்த ஒருவர் பேசினார். இயேசுவோடு பந்தியில் அமர்ந்தவர்களுள் ஒருவர் இவற்றைக் கேட்டு அவரிடம், 'இறையாட்சி விருந்தில் பங்கு பெறுவோர் பேறுபெற்றோர்' என்றார். (லூக்கா 14:15)

'இவற்றைக் கேட்டு'... அதாவது, அதுவரை இயேசு சொன்ன அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த ஒருவர், 'இறையாட்சி விருந்தில் பங்கு பெறுவோர் பேறுபெற்றோர்' என்ற பொதுவான ஒரு வாக்கியத்தைச் சொன்னது, பரிசேயர்கள் மத்தியில் நிலவிய மனநிலைக்கு ஓர் எடுத்துக்காட்டாக அமைகிறது.

இந்தச் சொற்றொடரின் முழு அர்த்தத்தைப் புரிந்துகொள்ள ஒரு கற்பனை காட்சி உதவும். பல பெரிய விழாக்களில், விருந்தைத் துவக்குவதற்கு முன், பழரசம் நிறைந்த கிண்ணங்களை அனைவரும் கரங்களில் தூக்கிப்பிடித்திருக்கும்போது, ஒருவர் நாலு நல்லவார்த்தைகள் சொல்வது வழக்கம். ஆங்கிலத்தில் இதை, "raising a toast" என்று குறிப்பிடுவோம். அந்த விருந்தில் கலந்துகொள்ளும் அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்த, குறிப்பாக, விருந்து கொடுப்பவரைக் 'குஷி'ப்படுத்த சொல்லப்படும் வார்த்தைகள் இவை. பல வேளைகளில், இவ்வார்த்தைகள் ஒப்புக்காக, சம்பிரதாயத்திற்காகச் சொல்லப்படும் வார்த்தைகளாக அமையும். இயேசுவோடு பந்தியில் அமர்ந்தவர்களுள் ஒருவர் சொன்ன வார்த்தைகளை இந்தக் கோணத்தில் சிந்திக்கலாம்.

விருந்து துவங்கிய நேரம் முதல் உன்னதமான உண்மைகளை இயேசு நேரடியாகவும், மறைமுகமாகவும் எடுத்துரைத்தார். இவற்றையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த ஒருவர், அந்த உண்மைகளின் உஷ்ணத்தைக் குறைக்கும் வண்ணம், இயேசு இதுவரை செய்தது, கூறியது எல்லாமே வேடிக்கை என்று சொல்லாமல் சொல்லும் வண்ணம் பொதுவான வாழ்த்தொன்றை வெளிப்படுத்துகிறார். "சரி, சரி இதுவரை பேசியதெல்லாம் போதும், வாருங்கள் சாப்பிடச் செல்வோம்" என்ற பாணியில் அவர் இந்த வார்த்தைகளைச் சொன்னாரோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.

அவர் கூறிய அந்தப் பொதுப்படையான வாழ்த்தில் மற்றொரு நுணுக்கமும் இருப்பதாக ஒரு சில விவிலிய விரிவுரையாளர்கள் கூறியுள்ளனர். விருந்தினர் கூறிய அந்த வாழ்த்துரையைக் கூர்ந்து நோக்கினால், அதில், 'பேறுபெற்றோர்' என்ற சொற்றொடர் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவர் கூறிய வார்த்தைகளை, இயேசு அதற்கு முன்னர் கூறிய வார்த்தைகளுடன் இணைத்துப் பார்க்கும்போது, வேறுபட்ட பொருளைத் தருகின்றன. தம்மை விருந்துக்கு அழைத்தவரிடம், “நீர் விருந்து அளிக்கும்போது ஏழைகளையும் உடல் ஊனமுற்றோரையும் கால் ஊனமுற்றோரையும் பார்வையற்றோரையும் அழையும். அப்போது நீர் பேறு பெற்றவர் ஆவீர்” என்று இயேசு கூறி முடித்ததும், “இறையாட்சி விருந்தில் பங்கு பெறுவோர் பேறுபெற்றோர்” என்று அவர் பதில் கூறினார்.

இயேசு கூறிய 'பேறு பெற்றவர் ஆவீர்' என்பதை திரித்துக் கூறும் வகையில் இந்த விருந்தினர் சொன்ன 'பேறுபெற்றோர்' அமைந்திருந்தது. ஓய்வுநாள் விதிகளை மீறி, நன்மை செய்யுங்கள்; விருந்துகளில் முதலிடம் தேடாதீர்கள்; வறியோரையும், நலமற்றோரையும் அழைத்து விருந்து கொடுங்கள்... இவையே இறையாட்சி விருந்தில் உங்களைச் சேர்க்கும் பேற்றினை வழங்கும் என்று இயேசு சொல்லித்தந்த அனைத்து பாடங்களையும் மறுக்கும் வண்ணம் அவர் கூறிய 'பேறுபெற்றோர்' வாக்கியம் அமைந்தது.

“இறையாட்சி விருந்தில் பங்கு பெறுவோர் பேறுபெற்றோர்” என்ற வார்த்தைகளை அவர் வாயால் கூறியபோது, அவர் உள்ளத்தில் ஓடிய எண்ணங்களுக்கு நாம் இவ்வாறு வார்த்தைவடிவம் கொடுக்கலாம்: "போதகரே, இறையரசின் விருந்தில் பங்குபெற நீர் தரும் கட்டுப்பாடுகள் தேவையற்றவை. ஒரு யூதர் என்ற முறையில், அதிலும் சிறப்பாக, ஒரு பரிசேயர் என்ற முறையில் நானும் என் உடன் பரிசேயரும் இறையாட்சி விருந்தில் பங்குபெற ஏற்கனவே அழைப்பு பெற்றுவிட்டோம். நீர் இப்போது புதிதாக வேறு அளவுகோல்களை எங்கள் மீது திணிக்கவேண்டாம்" என்று அவர் இயேசுவிடம் நினைவுறுத்துவதுபோல் இந்த வார்த்தைகள் அமைந்துள்ளன.

அவர் சொன்னது, அவரது அறியாமையை வெளிப்படுத்துகிறதா அல்லது அகந்தையை வெளிப்படுத்துகிறதா என்று நம்மைச் சிந்திக்க வைக்கிறது. பிறப்பால் தங்களை உயர்ந்தவர்கள் என்று எண்ணும் பலரின் பிரதிநிதியாக இவரை நாம் எண்ணிப் பார்க்கலாம். பிறப்பிலேயே உயர்வும் தாழ்வும் ஒருவரை அடைகிறது என்று வாழும் மனிதர்கள், அறியாமை கலந்த அகந்தையால் இத்தகைய எண்ணங்களை வளர்த்துக் கொள்கின்றனர் என்பதை விருந்துக்கு வந்திருந்தவர் நமக்கு நினைவுறுத்துகிறார். அறியாமையோ, அகந்தையோ எது அந்த விருந்தினரை அவ்வாறு பேசத் தூண்டியதோ, நமக்குத் தெரியாது. ஆயினும், அவருக்கு இயேசு கூறிய பதில் அழகியதோர் உவமையாக, 'பெரிய விருந்து உவமை'யாக, இருபது நூற்றாண்டுகளுக்கும் மேலாக நமக்கு பாடங்களைச் சொல்லித் தருகிறது. இந்த உவமையில் நாம் அடுத்த வாரம் பயணத்தை மேற்கொள்வோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.