2015-11-03 16:20:00

உலக முன்னேற்றத்திற்கு ஊழல் பெரும் தடை - ஐ.நா.பொதுச் செயலர்


நவ.03,2015. உலகின் அனைத்து நாடுகளிலும் பரவியிருக்கும் ஊழலின் எதிர்மறை தாக்கத்தால், உலக சமுதாயம் முன்னேற்றம் காணமுடியாமல் தவிக்கிறது என்று ஐ.நா.பொதுச் செயலர், பான் கி மூன் அவர்கள் கூறினார்.

நவம்பர் 2, இத்திங்களன்று, இரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் ஊழலுக்கு எதிரான உச்சி மாநாடு துவங்கியுள்ள வேளையில், மாநாட்டின் துவக்க விழாவில் பான் கி மூன் அவர்கள் இவ்வாறு உரையாற்றினார்.

2030ம் ஆண்டுக்குள், உலக முன்னேற்றத்தின் மில்லென்னிய இலக்குகளை அடைய வேண்டுமெனில், உலகெங்கும் பரவியிருக்கும் இலஞ்சம், ஊழல் ஆகிய நச்சுப் பண்புகளை ஒழிக்க வேண்டும் என்று ஐ.நா.வின் உயர் அதிகாரி, யூரி ஃபெதோத்தோவ் (Yury Fedotov) அவர்கள் இந்த மாநாட்டில் கூறினார்.

அடுத்த ஏழுநாட்கள் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெறும் இந்த உலக மாநாட்டில், 1000த்திற்கும் அதிகமான பன்னாட்டுப் பிரதிநிதிகள் பங்கேற்று வருகின்றனர்.

அண்மையில், இரஷ்ய விமான விபத்தில் உயிர் துறந்த அனைவரின் நினைவாக, இத்துவக்க விழாவின் ஆரம்பத்தில், மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. 

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.