2015-11-02 14:46:00

வாரம் ஓர் அலசல் – பாராட்டுவோம், பாராட்டைப் பெறுவோம்


நவ.02,2015. அமெரிக்க ஐக்கிய நாட்டு நியூயார்க்கில் சில காலமாக ஒரு தொடர் கொள்ளையனைப் பிடிக்க முடியாமல் காவல்துறையினர் திணறி வந்தனர். பல வீடுகளில் திருடிவிட்டு யாரிடமும் சிக்காமல் தப்பிவிடும் அவனின் உருவம் காவல்துறையினருக்கு கிடைக்காமல் இருந்தது. இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு தன் வீட்டிற்கு கொள்ளையடிக்க வந்தவனைப் பார்த்த பதினோரு வயது சிறுமியான ரபேக்கா டி பேய்ட்ரோ, அவனின் உருவம் இப்படித்தான் இருக்கும் என குச்சி போன்ற ஓர் உருவத்தை பென்சிலால் வரைந்து காவல்துறைக்கு கொடுத்தாள். அந்த ஓவியத்தை வைத்து கணனியின் மூலம் சூப்பர் இம்போஸ் செய்து, ஏற்கனவே அவர்களது பட்டியலில் இருந்த கொள்ளையர்களின் உருவங்களோடு காவல்துறையினர் ஒப்பிட்டுப் பார்த்தபோது, பெட்ரோ ப்ரூனோ என்ற ஒரு திருடனின் உருவத்தோடு அந்த வரைபடம் ஒத்துப்போனது. அவனை தேடிப்பிடித்து கைது செய்த காவல்துறையினர், அவனிடம் விசாரணை நடத்தினர். அந்தச் சிறுமியின் வீடு உட்பட, மேலும் பத்து வீடுகளில் தொடர்ந்து கொள்ளையடித்ததை அவன் ஒப்புக்கொண்டான். எனவே அவனைப் பிடிக்க உதவிய அந்தச் சிறுமிக்கு காவல்துறையினர் கடந்த மாதத்தில் ஒரு பாராட்டு விழாவே நடத்திவிட்டனர். பொதுமக்களில் பலரும் அந்த சிறுமியை பாராட்டியுள்ளனர்(அக்.18,2015).

அன்பர்களே, இப்படி ஒவ்வொரு நாளும் பாராட்டு செய்திகள் ஊடகங்களில் பிரசுரமாவதை வாசிக்கிறோம், தொலைக்காட்சியிலும், வலைத்தளங்களிலும், முகநூலிலும் பார்க்கிறோம். பாராட்டுக்குரியவர்களை நாமும் மனதாரப் பாராட்டுகிறோம். ஏறக்குறைய எல்லா வயதினரும், எல்லாத் துறையினருமே பாராட்டும்படியான அரிய சாதனைகளைச் செய்கின்றனர். கடந்த ஆகஸ்டில், ஆம்ஸ்டர்டாமிலிருந்து பாரிஸுக்குச் சென்று கொண்டிருந்த அதிவேக இரயிலில், துப்பாக்கியுடன் இருந்த மனிதர் ஒருவரை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்த, மூன்று அமெரிக்கர்களுக்குப் பாராட்டுக்கள் குவிந்ததை நாம் ஏற்கனவே கேட்டுள்ளோம். ஆண்டனி சாட்லர், அலெக் ஸ்கார்லட்டோஸ், ஸ்பென்ஸர் ஸ்டோன் ஆகிய மூவரும் தங்கள் உயிரைப் பணயம் வைத்து அந்த துப்பாக்கி மனிதரை வளைத்துப் பிடித்து பயணிகளின் உயிர்களைக் காப்பாற்றியுள்ளனர்(22ஆக.2015)

பண்டிகைகளின்போது அளவுக்கு அதிகமான பட்டாசு வெடித்து, ஒலி மற்றும் காற்று மாசடைகிறது. இது குழந்தைகளை அதிகமாகப் பாதிக்கிறது. சுற்றுப்புறத்தை நஞ்சாக்கும் மாசு எனும் அரக்கனை உடனடியாக ஒழிக்க முடியாவிட்டாலும், அதன் அளவையாவது குறைக்கலாமே என்று, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் சார்பில் பட்டாசுக்குத் தடை கேட்டு இந்திய உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இப்படி மனுத்தாக்கல் செய்தது, இந்திய உச்ச நீதிமன்றத்தின் வரலாற்றிலேயே முதன்முறையாகும். எனவே இந்தப் பெற்றோரைப் பலரும் பாராட்டினர். பாராட்டுக்குரிய பெற்றோர் என்று செய்திகளும் வெளியாகின. அதுவும் வருகிற வாரத்தில் தீபாவளிப் பண்டிகை சிறப்பிக்கப்படவிருக்கும் சூழலில் பட்டாசுகளால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் மாசுக்கேட்டை எல்லாருமே உணர்ந்து நடவடிக்கை எடுக்கலாமே. இப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டால் எல்லாருமே ஒருவரையொருவர் பாராட்டிக் கொள்ளலாம்.

சென்னையைச் சார்ந்த 23 வயதே நிரம்பிய சினேகா மோகன்தாஸ், விஸ்காம் பட்டதாரி. சமூக அக்கறையும் பின்தங்கி உள்ளவர்களுக்கும், அடித்தட்டு மக்களுக்கும் உதவிட வேண்டும் என்ற இயல்பான ஆர்வமும் கொண்டவர். இந்த இளம்பெண் சினேகா, உணவு வங்கி தொடங்கி பல நூறு பேரின் வயிற்றுப் பசியை ஆற்றி வருகிறார். சென்னையிலும் பல இடங்களிலும், மூன்றுவேளை உணவுக்கு வழியின்றி இன்றும் பலர் துன்பப்பட்டு வரும் நிலையை மாற்றுவதற்கு இந்த இளம்பெண் சிந்தித்தன் பலன்தான் உணவு வங்கி. இந்த வங்கிக் குழுவில் உள்ள உறுப்பினர்கள் தங்களது வீடுகளில் இருப்போருக்கு சமையல் செய்கையில் கொஞ்சம் கூடுதலாக சமைத்துவிடவேண்டும். பின்னர் சினேகாவை முகநூல் அல்லது வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டு விவரங்கள் தெரிவித்தால் போதும். உணவு வங்கியின் ஆர்வலர்கள் நேரில் சென்று உணவை பாக்கெட் செய்து எடுத்துக்கொண்டு சாலைகளில் உணவின்றி வாடுவோருக்கு வழங்கி அவர்களின் பசியைப் போக்குகிறார்கள். தற்போது சென்னை தியாகராஜ நகரில் மட்டும் ஒரு நாளைக்கு 55 பாக்கெட் உணவுகள் சினேகாவின் உணவு வங்கி மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இவரின் இந்த முயற்சிக்கு சினேகாவின் உறவினர்கள், நண்பர்கள் என்று அனைவரும் ஊக்கம் அளித்து உதவி வருகின்றனர். வங்கி ஆரம்பித்து ஒரு சில மாதங்களிலேயே முகநூல் மூலம் 2,895 நண்பர்கள் உணவு வங்கியில் இணைந்துள்ளனர். சென்னையில் தியாகராஜ நகர், நுங்கம்பாக்கம், அடையாறு, பெரம்பூர், கீழ்ப்பாக்கம், அசோக் நகர், சைதாப்பேட்டை, மேற்கு மாம்பலம், சேத்துப்பட்டு ஆகிய இடங்களில் உணவு வங்கியின் ஆர்வலர்கள் தங்களின் உணவு சேவையை வழங்கி வருகிறார்கள். தற்போது சென்னை முழுக்க நாள் ஒன்றுக்கு 1,200 உணவு பாக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த முயற்சி பற்றி ஊடகத்திற்குப் பேட்டியளித்துள்ள சினேகா மோகன்தாஸ், அடுத்த சில ஆண்டுகளில் சென்னையில் சாலைகளில் வாழ்வோர் யாரும் மூன்றுவேளை உணவின்றி வாடும் நிலை இல்லாமல், உணவுண்டு வயிறு நிறைந்து, பட்டினியை வென்ற மனிதர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்பதே எனது கனவு என்று சொல்லியுள்ளார். அன்பர்களே, பட்டினியை விரட்டிவரும் இவர் உண்மையிலேயே அனைவரின் பாராட்டுக்குரியவர்(அக்.17,2015)

2014ம் ஆண்டின் நொபெல் அமைதி விருதை பாகிஸ்தான் சிறுமி மலாலா யூசுப்சாயுடன் பகிர்ந்து கொண்டுள்ள இந்தியர் கைலாஷ் சத்யார்த்தி அவர்களுக்கு, 2015ம் ஆண்டின் சிறந்த மனிதநேயர் விருதை அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம் கடந்த அக்டோபரில் (அக்.17,2015)வழங்கியுள்ளது. குழந்தைகளின் உரிமைக்காகப் போராடி வரும் கைலாஷ் சத்யார்த்தியின் சேவையைப் பாராட்டி, இவ்விருது வழங்கப்படுவதாக, ஹார்வர்டு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம், இவ்விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். உலகில், குழந்தைத் தொழிலாளர்களே இல்லாத நிலையை ஏற்படுத்த நாம் உறுதி பூணுவோம் என்று சத்யார்த்தி அவர்கள் சொல்லியிருக்கிறார். அமெரிக்காவில் மனித உரிமைகளுக்காக பாடுபட்ட, மார்ட்டின் லுாதர் கிங், ஐ.நா. நிறுவன பொதுச் செயலர் பான் கி மூன், முன்னாள் பொதுச் செயலர் கோபி அன்னான், நொபெல் விருது பெற்ற ஆங்லிக்கன் பேராயர் டெஸ்மண்டு டுட்டு உள்ளிட்டோருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

எனக்கு எதற்கு பாராட்டு விழா, நான் என் கடமையைத் தானே செய்தேன் என்று சொல்பவர்களையும், அதேநேரம் பாராட்டுக்களைக் கேட்டுப் பெற்றவர்களையும், அன்பு நெஞ்சங்களே, நாம் பார்த்திருக்கிறோம். வாழ்க்கையில் கிடைக்கும் உற்சாகமூட்டும் சொற்கள், செய்யும் பணிகளைச் சோர்வின்றி, தளர்ச்சியின்றி செய்வதற்குப் பலருக்கு உதவுகின்றன. வாழும்போதெல்லாம் பாராட்டாத உலகம், மனிதர் இறந்த பின்னர் பூ மழையைவிட பாராட்டு மழையால் இறந்தவரின் உடலை மேலும் குளிராக்குகிறது. இறந்தவர்க்கு யார் யார் தன்னைப் பாராட்டுகிறார்கள் என்றா தெரியப் போகிறது. நவம்பர் 2, இத்திங்கள் இறந்தோர் நினைவு தினம். ஆண்டுதோறும் இந்நாளில் கிறிஸ்தவர்கள் இறந்தவர்களை சிறப்பாக நினைத்து அவர்களுக்காகச் சிறப்பான செபங்களைச் சொல்கிறார்கள். அன்பர்களே, இந்த நாளில் நம்மைவிட்டுச் சென்றவர்கள் ஆற்றிச்சென்ற நல்ல காரியங்களை நினைத்துப் பெருமைப்படுவோம். மனதார அந்த ஆன்மாக்களை வாழ்த்துவோம்.

அணிலுக்கு அதன் முதுகில் மூன்று கோடுகள் எப்படி வந்தன என்ற கதை நம் எல்லாருக்குமே தெரியும். இந்தக் கதையின் மற்ற கூறுகளை நோக்காமல் இக்கதை சொல்லும் ஓர் ஆழமான பொருளை நோக்குவோம். யாராக இருந்தாலும், மனமுவந்து பாராட்டுங்கள் என்பதே அது. செய்கிற வேலைக்குக் கிடைக்கும் பாராட்டு எவரையும் ஊக்கப்படுத்தும். இன்னும் சற்று அதிகமாக உழைக்க வைக்கும். தன்னுடைய முயற்சியும் உழைப்பும் அங்கீகரிக்கப்படுகின்றன என்ற எண்ணம் நம்பிக்கையை வளர்க்கிறது. இன்னும் நன்கு செயலாற்ற வேண்டும் என்கிற வேட்கையை உண்டாக்குகிறது. குறிப்பாக, கல்வியிலோ, பொருளாதார நிலையிலோ, பணி நிலையிலோ, வயதிலோ அல்லது சமூக அங்கீகாரத்திலோ சற்றுக் குறைவான நிலையில் உள்ளவரை அங்கீகரித்துப் பாராட்டுவது அவசியம். அவர்களுக்கு அதைவிட ஊக்கமருந்து இல்லை. வாழ்க்கை என்னும் விளையாட்டில், தடைசெய்யப்பட முடியாத ஊக்க மருந்து இது!

ஒரு சமயம், ஒரு அம்மா ஒரு பெரியவரிடம், சென்று தனது கணவரைப் பற்றி முறையிட்டார். அவரும் அந்த அம்மாவை அமரவைத்து, சரி, கணவரைப் பற்றிய குறைகளையெல்லாம் சொன்னீர்கள். அவர் செய்துள்ள நன்மைகளையும் சொல்லுங்கள் என்றவுடன், கணவர் செய்த ஒவ்வொரு நல்ல காரியமாக நினைத்து நினைத்துச் சொன்னார். அப்போது அந்தப் பெரியவர், ஏம்மா.. இவ்வளவு நன்மைகளை உங்கள் கணவர்  செய்திருக்கிறார், அப்புறம் என்ன குறை உங்களுக்கு என்று கேட்டார். அதற்கு அந்த அம்மா, என் கணவர் என்னைப் பாராட்ட வேண்டிய நேரத்தில் பாராட்டுவதே கிடையாது. என்னை அலட்சியமாக நினைக்கிறார். அதுதான் எனக்குப் பெரிய குறையாகத் தெரிகிறது என்றார். சரி, இனிமேல் உங்கள் கணவர் இதுவரை செய்துள்ள மற்றும் இனிமேலும் செய்யக்கூடிய நன்மைகளை மட்டும் நினைத்து நன்மையையே பேசுவதை ஒரு தீர்மானமாக எடுங்கள் என்று சொல்லியனுப்பினார் அந்தப் பெரியவர். அந்த அம்மாவும் இதை ஒரு வாரம் பயிற்சி செய்தவுடனேயே அவர்கள் முகத்தில் ஒரு தனி மலர்ச்சி ஏற்பட்டதாம்.

ஆம். ஒருவர் பற்றிக் குறையைச் சொல்வதைவிட அவர் செய்த, செய்யும் நல்ல செயல்களை நினைத்து அவருக்கு மனதாரப் பாராட்டும் நன்றியும் சொல்லும்போது, சொல்பவர்க்கு மன அமைதி ஏற்படும். முகத்தில் புன்முறுவல் தோன்றும். வாழ்வும் மகிழ்வாக அமையும். எனவே அன்பர்களே, பிறரை மனதாரப் பாராட்டுவோம். வாழ்வில் மனமகிழ்ச்சியடைவோம். நாமும் பாராட்டைப் பெறுவோம்.     

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.