2015-11-02 15:26:00

கத்தோலிக்கத் திருஅவையும், லூத்தரன் சபையும் இணைய முயற்சிகள்


நவ.02,2015. திருஅவை, அருள்பணி, திருவிருந்து ஆகிய மூன்று அம்சங்களில், கத்தோலிக்கத் திருஅவையும், லூத்தரன் சபையும் இணைந்து வர வழிவகுக்கும் ஓர் அறிக்கையை, அமெரிக்க ஐக்கிய நாட்டில் உள்ள கத்தோலிக்க, லூத்தரன் சபை தலைவர்கள் வெளியிட்டுள்ளனர்.

அமெரிக்க ஐக்கிய நாட்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அண்மையில் மேற்கொண்ட திருத்தூதுப் பயணத்தின்போது, கிறிஸ்தவ ஒன்றிப்பு உரையாடல் குறித்து வலியுறுத்திக் கூறியதன் விளைவாக, இந்த முயற்சி துரிதப்படுத்தட்டுள்ளது என்று, இவ்வறிக்கையை உருவாக்கிய குழுவில் பணியாற்றிய, பால்டிமோர் உயர் மறைமாவட்டத்தின் துணை ஆயர், Denis Madden அவர்கள் கூறினார்.

ஐநூறு ஆண்டுகளுக்கு முன், கத்தோலிக்கர்களும், லூத்தரன் சபையினரும் பிரிவதற்குக் காரணங்களாக இருந்த அதே அம்சங்களில் தற்போது ஒருங்கிணைப்பு முயற்சிகள் துவங்கியுள்ளன என்று லூத்தரன் சபையின் ஆயர், எலிசபெத் ஈட்டன் (Elizabeth Eaton) அவர்கள் கூறினார்.

கத்தோலிக்கருக்கும், லூத்தரன் சபையினருக்கும் இடையே ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட உரையாடல் முயற்சிகளின் விளைவாக, 1999ம் ஆண்டு வெளியான ஓர் அறிக்கையின்படி, இரு சபையினரும், ஒருவரை ஒருவர் கண்டனம் செய்வதை நிறுத்தவேண்டும் என்ற ஒப்பந்தம் உருவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

'புராட்டஸ்டன்ட்' மறுமலர்ச்சி உருவாகி, 500வது ஆண்டு நிறைவு, 2017ம் ஆண்டு நெருங்கிவரும் வேளையில், கத்தோலிக்கரும் லூத்தரன் சபையினரும் இவ்விதம் இணைந்து வருவது, கருத்து வேறுபாடுகளால் காயமுற்றிருக்கும் உலகிற்கு நல்லதொரு சாட்சியமாக விளங்கும் என்று ICN கத்தோலிக்கச் செய்தி கருத்து தெரிவித்துள்ளது.

ஆதாரம் : ICN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.