2015-11-02 14:38:00

கடுகு சிறுத்தாலும் – புதையல் வெளியே இல்லை


அது ஒரு பெரிய சந்தை. பலபேர் வந்து போகும் இடம். அந்த சந்தைக்கு ஒருவர் தினமும் காலையில் வருவார். வலது கையை மட்டும் நீட்டிக் பிச்சைக் கேட்டுக் கொண்டிருப்பார். அவர் வாயைத் திறந்து பிச்சை போடுங்கன்னு கேட்கவே மாட்டார். இப்படி ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகள் தினமும் அவர் வந்து ஒரே இடத்தில் நின்று பிச்சைக் கேட்டுக் கொண்டிருந்தார். ஒருநாள் அவர் திடீர் என்று இறந்து அந்த இடத்திலே விழுந்தார். அவர்மேல் பரிதாபட்ட ஊர் மக்கள், இந்த மனிதர் ஒரு வித்தியாசமான பிச்சைக்காரராக இருந்தார். எனவே அவர் இறந்த இடத்தில் ஒரு சிலை வைப்போம் என்று பேசி முடிவெடுத்து நிதியும் வசூல் செய்தனர். மக்களும் தாராளமாக நிதி கொடுத்தனர். அந்த மனிதர் நின்று கொண்டிருந்த இடத்தில் ஒரு இரண்டு அடி ஆழம்தான் தோண்டியிருப்பார்கள். டங் டங்ன்னு ஒரு வித்தியாசமான சப்தம் கேட்டது. அவரம் அவசரமாகத் தோண்டினார்கள். ஒரு செப்புக் குடம் தெரிந்தது. அக்குடம் நிறைய தங்க மற்றும் வெள்ளி நாணயக் காசுகள் இருந்தன. அப்போது ஒருவர் சொன்னார்- அந்தப் பிச்சைக்காரர் தனது காலுக்கு அடியிலேயே புதையல் இருப்பது தெரியாமல் எல்லாரிடமும் கையேந்தி நின்னே செத்துப் போயிட்டார் என்று. அப்போது அவ்வழியாய் வந்த துறவி ஒருவர், உண்மைதான். ஒவ்வொரு மனிதருமே இப்படித்தான் நடந்து கொள்கின்றார்கள். தன்னிடம் குவிந்து கிடக்கும் திறமை, மகிழ்ச்சி, இன்பம், தெய்வத்தன்மை போன்றவற்றைப் புரிந்துகொள்ளாமல் அவை எங்கேயோ இருக்கின்றன என்று நினைத்து அவற்றைக் காலமெல்லாம் தேடி இறந்து விடுகின்றனர் என்று சொல்லிவிட்டு தன்வழியே நடந்தார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.