2015-11-02 15:14:00

10 வருடங்களில் 700 ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்


நவ.02,2015. உலகில் பல்வேறு துறைகளிலும் பங்களிப்பாற்றிய 700 ஊடகவியலாளர்கள், கடந்த 10 ஆண்டுகளில் கொலை செய்யப்பட்டுள்ளதாக, ஐக்கிய நாடுகள் நிறுவனம் இத்திங்களன்று தெரிவித்தது.

ஊடகவியலாளர்களுக்கு எதிராக குற்றங்களைக் கண்டிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட, வன்முறையை எதிர்க்கும் அகில உலக தினத்தை முன்னிட்டு, ஐக்கிய நாடுகள் அமைப்பு வெளியிட்டுள்ள சிறப்பு அறிக்கையில், இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

2013ம் ஆண்டு நவம்பர் 2ம் தேதி, மாலி நாட்டில், இரண்டு ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஐக்கிய நாடுகள் நறுவனத்தால் வன்முறையை எதிர்க்கும் அகில உலக தினம் உருவாக்கப்பட்டது.

2014ம் ஆண்டு ஐ.எஸ். தீவிரவாதிகள், ஈராக்கின் மொசூல் நகரை கைப்பற்றியதிலிருந்து இதுவரை ஈராக்கில் 13 ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் ஐ.நா அறிக்கை கூறுகிறது.

இலங்கையில் கடந்த 10 ஆண்டுகளில் மூத்த ஊடகவியலாளர் இலசந்த விக்ரமதுங்க, பிரகீத் எக்நேலியகொட உட்பட பல ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர், அல்லது, காணாமல் போயுள்ளனர். இதற்கு முன்னர், மூத்த தமிழ் ஊடகவியலாளர்களான சிவராம், நிமலராஜன் உட்பட பலர் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : TamilWin / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.