2015-10-31 15:05:00

புனிதர் அனைவரின் பெருவிழா : ஞாயிறு சிந்தனை


அசிசி நகர் புனித பிரான்சிஸ், ஓர் இளம் துறவியை ஒரு நாள் அழைத்து, "வாருங்கள் நாம் ஊருக்குள் சென்று போதித்துவிட்டு வருவோம்" என்று கூறி, உடன் அழைத்துச் சென்றார். போதிப்பதற்கு தன்னை பிரான்சிஸ் அழைத்துச் செல்கிறார் என்பதை உணர்ந்த அந்த இளையவர் மிகவும் மகிழ்ந்தார். ஊருக்குள் நுழையும் நேரத்தில், ஒரு மரத்தின் கூட்டிலிருந்து கீழே விழுந்திருந்த ஒரு குஞ்சுப் பறவையை, மீண்டும் மரமேறி, அந்தக் கூட்டில் வைத்துவிட்டு இறங்கினார் பிரான்சிஸ். போகும் வழியில் அறுவடை செய்துகொண்டிருந்த பணியாள்களுடன் இறங்கி வேலை செய்தார் பிரான்சிஸ். இதைக் கண்ட அந்த இளம் துறவியும் குனிந்து வேலைகள் செய்தார். ஊருக்குள் சென்றதும், அங்கு ஒரு கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்த வயதானப் பெண்மணிக்கு பிரான்சிஸ் தண்ணீர் இறைக்க உதவினார். அவருடன் அந்தத் தண்ணீர் பாத்திரங்களை அவர் வீடுவரை சுமந்து சென்றார். இப்படி நாள் முழுவதும், அந்த ஊரில் இருந்த அனைவருடனும் சேர்ந்து பல பணிகள் செய்தார் பிரான்சிஸ். ஒவ்வொரு முறையும் பிரான்சிஸ் ஓர் இடத்தில் நிற்கும்போது, அந்த இடத்தில் அவர் போதிக்கப் போகிறார் என்று இளையவர் எண்ணினார். ஆனால், ஒரு வார்த்தையும் சொல்லாமல், பிரான்சிஸ் பல உதவிகளைச் செய்தார். அந்த நாள் இறுதியில், பிரான்சிஸ் கோவிலுக்குச் சென்றார். அவர் கட்டாயம் அந்த நேரத்தில் போதிப்பார் என்று இளையவர் எதிர்பார்த்ததற்கு மாறாக, பிரான்சிஸ் கோவிலில் அமைதியாக செபித்துவிட்டுக் கிளம்பினார்.

மாலையில், இருவரும் மீண்டும் ஊரைவிட்டு வெளியே வந்து, தங்கள் துறவகத்தை நோக்கிச் சென்றபோது, இளையவர் தன் உள்ளத்தில் நிறைந்திருந்த ஏமாற்றத்தை வெளியிட்டார். "போதிப்பதற்காகத்தானே ஊருக்குள் சென்றோம். இப்போது போதிக்காமலேயே திரும்புகிறோமே!" என்று தன் உள்ளக் குமுறலைக் கூறினார். "நாம் தேவையான அளவு இன்று போதித்துவிட்டோம். நமது செயல்கள், வார்த்தைகளை விட வலிவானவை. தேவைப்படும்போது மட்டும் வார்த்தைகளை நாம் பயன்படுத்தவேண்டும்" என்று அந்த இளையவருக்கு பிரான்சிஸ் கூறினார்.

வாழ்க்கை முழுவதையும் ஒரு நற்செய்தியாக மாற்றிய அசிசி நகர் பிரான்சிஸ், திருஅவையின் புனிதரெனக் கொண்டாடப்படுகிறார். இப்புனிதரின் வாழ்வு, கத்தோலிக்க மதத்தையும் தாண்டி, உலகின் பல கோடி மக்களைக் கவர்ந்துள்ளது என்பது உண்மை.

வாழ்க்கையை நற்செய்தியாக மாற்றியப் பலரில், உலகப் புகழ்பெற்ற Albert Schweitzer என்ற மருத்துவரும் ஒருவர். இவர் ஆப்ரிக்காவில் மேற்கொண்ட அற்புதமான மருத்துவப் பணிகளுக்காகவும், அணு ஆய்வுகள் இவ்வுலகிற்குத் தேவையில்லை என்ற எண்ணத்தை உலகில் பரப்ப அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்காகவும் 1952ம் ஆண்டு, உலக அமைதிக்கான நொபெல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது. இப்பரிசைப் பெற்ற அடுத்த ஆண்டு, அவர் அமெரிக்காவின் சிக்காகோ நகருக்கு இரயிலில் சென்றார். அவரை வரவேற்க பத்திரிக்கையாளர்களும், பெரும் தலைவர்களும் இரயில் நிலையத்தில் காத்திருந்தனர். Albert அவர்கள், இரயிலைவிட்டு இறங்கியதும், கரவொலியும், காமிரா ஒளிவிளக்களும் அந்த இடத்தை நிறைத்தன. தன்னை சிறிது நேரம் மன்னிக்கவேண்டும் என்று வேண்டியபடி, Albert அவர்கள், அந்தக் கூட்டத்தை விலக்கிக்கொண்டு சென்றார். அந்த இரயில் நிலையத்தில் இரு பெட்டிகளைச் சுமந்தபடி, தடுமாறி நடந்துகொண்டிருந்த வயதான, கறுப்பின பெண்மணி ஒருவருக்கு உதவிசெய்து, அவரை ஒரு பேருந்தில் ஏற்றிவிட்டபின், தனக்காகக் காத்திருந்த கூட்டத்திடம் வந்தார் Albert. நடந்ததைக்கண்ட ஒரு பத்திரிகையாளர், மற்றொருவரிடம், "நான் இதுவரை கோவில்களில் மறையுரைகளைக் கேட்டிருக்கிறேன். இதுதான் முதல்முறையாக, ஒரு நடமாடும் மறையுரையைப் பார்க்கிறேன்" என்று கூறினார்.

லூத்தரன் சபையைச் சேர்ந்த Albert Schweitzer அவர்கள், 25 வயது இளைஞனாக இருந்தபோது, மறையுரை வழங்குவதில், இறையியல் வகுப்புக்கள் நடத்துவதில் தன்னிகரற்ற புகழ் பெற்றிருந்தார். ஆப்ரிக்க நாடுகளில் நிலவிவந்த தேவைகளைப் பற்றி கேள்விப்பட்ட Albert அவர்கள், தனது 30வது வயதில், பேராசிரியர் பதவியை விட்டுவிட்டு, மருத்துவம் படித்து, ஆப்ரிக்காவில் மிகவும் பின்தங்கிய ஒரு பகுதியில் மருத்துவ மனையொன்றை நிறுவி, பணிசெய்யத் துவங்கினார். பல்வேறு இடர்கள், சிறைவாசம் என்று அவர் வாழ்வில் சவால்கள் வந்தாலும், வறுமையில் வாடிய ஆப்ரிக்க மக்களுக்கு 40 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவப் பணிகளைச் செய்துவந்தார்.

இளமையில் நற்செய்தியை வார்த்தைகளாய் முழங்கிப் புகழ்பெற்ற Albert அவர்கள், தன் வாழ்வின் பிற்பகுதியில் நற்செய்தியை வாழ்வாக்கினார். நடமாடும் மறையுரையாக வாழ்ந்த மருத்துவர் Albert அவர்கள், புனிதர் என்ற பட்டத்தைப் பெறாதவர். இவரைப் போல், இன்னும் பல கோடி மனிதர்கள், புனிதர்கள் என்று அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படவில்லை எனினும், உன்னத மனிதர்களாக நம் உள்ளங்களில் குடி கொண்டுள்ளனர். அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படாத இத்தகையப் புனிதர்களை எண்ணி, இறைவனுக்கு நன்றி சொல்ல, அன்னையாம் திருஅவை உருவாக்கியுள்ள ஒரு பெருவிழாவை இன்று நாம் கொண்டாடுகிறோம். நவம்பர் 1, இஞ்ஞாயிறன்று நாம் கொண்டாடும் அனைத்துப் புனிதரின் பெருவிழாவன்று, புனிதத்தைப் பற்றி சிந்திப்பது, பயனுள்ள ஒரு முயற்சியாகும். புனிதம் என்றால் என்ன? புனிதர்கள் யார்?

விவிலிய ஆய்வில் ஈடுபட்டுள்ள அருள்பணி இயேசு கருணா என்பவர், யார் புனிதர்கள் என்ற கேள்விக்கு வழங்கும் பதில்கள் நம்மைச் சிந்திக்கத் தூண்டுகின்றன. புனித வாழ்வு நமக்கும் சாத்தியம் என்ற நம்பிக்கையைத் தருகின்றன:

நாம் திருவழிபாட்டில் கொண்டாடும் ஒவ்வொரு புனிதரும் மற்றவரிடமிருந்து தன் வாழ்வால், பணியால், இறப்பால் மாறுபட்டிருந்தாலும், மூன்று பண்புகள் அனைவருக்கும் பொதுவாயிருக்கின்றன:

1. புனிதர்கள், நம்மைப் போல காலத்திற்கும், இடத்திற்கும் உட்பட்டவர்கள். இவர்கள் எல்லாருக்கும் ஒரு தொடக்கம், ஒரு முடிவு இருக்கிறது. இவர்களுக்கென்று உடல் இருக்கிறது. உறவுகள் உள்ளன. ஊர் இருக்கிறது. இவர்கள் வேற்று கிரகத்திலிருந்து வந்தவர்கள் அல்ல. தங்களுக்கு கொடுக்கப்பட்ட வாழ்வில், அந்த வாழ்வுச் சூழலில் இவர்கள் உன்னதமான மாற்றங்கள் உருவாகக் காரணமாக இருந்திருக்கிறார்கள். இவர்களால் முடியும் என்றால் நம்மாலும் முடியும்.

2. புனிதர்கள் பலருக்கும் அடித்தள அனுபவம் (foundational experience) இருந்தது. நமக்கு அன்றாடம் நிகழ்பவையெல்லாம் அனுபவங்கள். ஆனால், என்றாவது ஒருநாள் நிகழ்ந்து, நம் வாழ்வையே முற்றிலும் மாற்றுகிறதே ஓர் அனுபவம், அதுதான் அடித்தள அனுபவம். இந்த அனுபவம், மோசேக்கு எரியும் முட்புதரிலும், எலியாவுக்கு வீசும் காற்றிலும், பவுலுக்கு தமஸ்கு நகர்ச் சாலையிலும், மகாத்மா காந்திக்கு பீட்டர்ஸ்பர்க் இரயில் பயணத்திலும், அன்னை தெரசாவுக்கு கொல்கொத்தா நகர் சேரியிலும்  வந்தது. நம் அடித்தள அனுபவம் என்ன? என்று நாம் கேட்க வேண்டும்.

3. புனிதர்கள் யாரும் திரும்பிப் பார்க்கவில்லை (no turning back). தங்கள் அடித்தள அனுபவத்தின் விளைவாக வாழ்வில் அவர்கள் எடுத்த முடிவிலிருந்து திரும்பிச் செல்லவில்லை. எந்தப் பிரச்சனை வந்தாலும், எந்த இடர் வந்தாலும் அவர்கள் அதை எதிர்கொள்ள தயாராக இருந்தனர்.

இந்த மூன்று பண்புகளும் நமக்கு இருந்தால், நாமும் புனிதர்களே.

இந்த மூன்று எண்ணங்களைத் தொடர்ந்து, அருள்பணி இயேசு கருணா அவர்கள், இன்றைய நற்செய்தியில் கூறப்பட்டுள்ள 'பேறுபெற்றோர்' வரிகளை, உளவியலாளரும், தொலைக்காட்சி போதகருமான ராபர்ட் ஷூல்லர் (Robert Schuller) என்பவரின் கண்ணோட்டத்திலிருந்து அழகாகச் சிந்தித்திருக்கிறார்.

மத்தேயு நற்செய்தி 5: 3-10

ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது.

பண்பு 1: ஏழையரின் உள்ளம். 'எனக்கு மற்றவர்களின் உடனிருப்பு தேவை. என்னால் தனியாக எதையும் செய்ய முடியாது.'

துயருறுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர்.

பண்பு 2: துயரம். 'நான் காயப்பட்டாலும், திரும்பப் பாய மாட்டேன். தொடர்ந்து முன் செல்வேன்'

கனிவுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்.

பண்பு 3: கனிவு. 'என்ன நடந்தாலும் நான் அமைதியாகவும், பொறுமையாகவும், உடைந்து போகாமலும் இருப்பேன்.'

நீதிநிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நிறைவுபெறுவர்.

பண்பு 4: நீதி நிலைநாட்டும் வேட்கை. 'நான் சரியானதை மட்டுமே எப்போதும் செய்ய விரும்புகிறேன்.'

இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்.

பண்பு 5: இரக்கம். 'மற்றவர்கள் என்னை எப்படி நடத்த வேண்டும் என விரும்புகிறேனோ, அப்படியே நான் மற்றவர்களையும் நடத்துவேன்.'

தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர்.

பண்பு 6: தூய்மையான உள்ளம். 'கடவுள்மேல் நான் கொண்டுள்ள நம்பிக்கையை என் அனைத்து செயல்களிலும் பாய்ந்தோடச் செய்வேன்.'

அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்.

பண்பு 7: அமைதி. 'நான் பாலம் கட்டுபவராக, இணைப்பவராக இருப்பேன்.'

நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறு பெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது.

பண்பு 8: நீதியின் பொருட்டு துன்பம். 'என்ன நடந்தாலும் என் மகிழ்ச்சியை நான் இழந்துவிட மாட்டேன்.'

இறுதியாக, ஓர் எண்ணம்... நவம்பர் 1 புனிதர் அனைவரின் திருநாள். நவம்பர் 2 இறந்தோர் அனைவரின் நினைவு நாள். இவ்விரு நாட்களும் ஒன்றையொன்று தொடர்ந்து வருவது, மனதில் ஒரு சில எண்ணங்களை எழுப்புகிறது. இவ்விரு நாட்களும் முன்பின் முரணாக வருகின்றனவோ என்று சில வேளைகளில் நான் நினைப்பதுண்டு. பொதுவாக ஒருவர் இறந்தபின்னரே புனிதராகும் நிலை உருவாகும். எனவே, முதலில் இறந்தோரின் நினைவு நாளையும், பின்னர், புனிதர்களின் திருநாளையும் கொண்டாடுவதுதானே பொருத்தம்? இறப்புக்குப் பின் புனிதமா? அல்லது புனிதம் அடைந்தபின் இறப்பா?

ஒருவர் இறந்ததும், அவரைப் பற்றி நல்லவைகளே அதிகம் பேசப்படும். ஒருவரது குறைகளைக் குறைத்து, மறைத்துவிடும் வல்லமை பெற்றது மரணம். ஒருவர் இறந்தபின், மறைந்தபின் அவரைப்பற்றி நாம் கூறும் நல்லவற்றை, அவர் வாழ்ந்த காலத்திலேயே அவரது முன்னிலையில், அவர் காதுபடக் கூறியிருந்தால், அவர் இன்னும் நல்ல வழியில் வாழ்ந்திருப்பாரே.

இறந்தபின் வழங்கப்படும் புகழ் மாலைகளை, நல்லவர் என்ற மரியாதையை, வாழும்போதே ஒவ்வொருவருக்கும் நாம் கொடுத்தால், இவ்வுலகில் வாழும் புனிதர்களின் எண்ணிக்கை அதிகமாகுமே. புனிதர்கள் விண்ணுலகில்தான் இருக்கவேண்டும் என்றில்லையே. தாங்கள் நல்லவர்கள் என்று வாழ்நாள் எல்லாம் உணரும் மனிதர்கள், அவ்வாறே சூழ இருப்பவர்களால் போற்றப்படும் மனிதர்கள், புனிதர்கள் என்ற நிறைவோடு இவ்வுலகை விட்டு விடைபெற்று போகலாமே.

இந்த எண்ணத்தை வலியுறுத்தும் நோக்கத்தில்தான் கத்தோலிக்கத் திருஅவை, புனிதர் அனைவரின் திருநாளுக்குப்பின், இறந்தோர் அனைவரின் நினைவு நாளைக் கொண்டாட நம்மை அழைக்கிறதோ? சிந்திக்க வேண்டிய கருத்து.

“ஒரு தலைவன் அல்லது நாயகன், இவ்வுலகில் பெரும் ஒளியைத் தூண்டுகிறார். இருள் சூழ்ந்த இவ்வுலக வீதிகளில் மக்கள் நடப்பதற்கு அவர் ஒளிப் பந்தங்களை ஏற்றி வைக்கிறார். புனிதரோ, உலகின் இருளான பாதைகளில் தானே ஒளியாக நடந்து செல்கிறார்” என்று கூறியவர், பீலிக்ஸ் அட்லர் (Felix Adler).

இருள் சூழ்ந்த இவ்வுலகைப் பற்றி அடிக்கடி வேதனைப்படுகிறோம். "இருளைப் பழிப்பதைவிட, ஒளியை ஏற்றுவோம்" என்று பல மேதைகள் கூறியுள்ளனர். இருள் சூழ்ந்த இவ்வுலகில் ஒளியை ஏற்றுவோம்; ஒளியாக வலம்வருவோம்; இறுதியில் நாம் இவ்வுலகம் விட்டுச் செல்லும்போது, அதை இன்னும் சற்று அழகுமிக்கதாய் விட்டுச் சென்றோம் என்ற திருப்தியுடன் விடைபெற்றுச் செல்வோம். அதுவே புனிதர்களின் அழகு!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.