2015-10-31 15:48:00

திருத்தந்தை:பணித்தளங்களை புனிதத்தின் இடங்களாக மாற்ற முடியும்


அக்.,31,2015. பொதுநலனுக்கென வளர்ச்சித் திட்டங்களை கட்டியெழுப்புபவர்களாக கத்தோலிக்க  தொழிலதிபர்கள் செயல்பட வேண்டும் என இச்சனிக்கிழமையன்று இத்தாலிய கத்தோலிக்க தொழிலதிபர்கள் கூட்டமைப்பை திருப்பீடத்தில் சந்தித்தபோது திருத்தந்தை எடுத்துரைத்தார்.

திருஅவையின் சமூகப் படிப்பினைகளின் துணையோடு, பொதுநலனை மனதில் கொண்டு, முதலாளிகளுக்கும் தொழிலாளிகளுக்கும் இடையே நல்ல சகோதரத்துவ உறவை வளர்த்து செயலாற்றும்போது, பணிதளங்கள் புனிதத்துவத்தின் இடங்களாக மாறும் எனவும் கூறினார் திருத்தந்தை.

பகிர்தல் மற்றும் ஒருமைப்பாட்டுணர்வு போன்றவற்றிற்கு அதிக வாய்ப்புகள் உள்ள பணியிடங்கள், தனி மனிதர்களின் துயரங்களில் அருகாமையை வழங்குபவைகளாகவும் உள்ளன என்பதையும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  இத்தகைய நல்ல பண்புகளை செயல்படுத்த இரக்கத்தின் ஜூபிலி ஆண்டு நல்லதொரு வாய்ப்பை வழங்கும் என்ற நம்பிக்கையையும் தெரிவித்தார்.

மனிதர்கள் மற்றும் பொதுநலனுக்கான சேவையில், செயல்படும் அனைத்து தொழில் நிறுவனங்களும், சிறிய அளவிலாவது பிறரன்பு பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

பொருளாதார வளர்ச்சி, புதிய வழிமுறைகள், வேலைவாய்ப்புகள் என பல்வேறு நற்கூறுகளை தன்னுள்ளே கொண்டுள்ள தொழில் நிறுவனங்கள், நியாயமான போட்டி, நேர்மை, பொறுப்புணர்வு போன்றவைகளையும் கொண்டு செயல்படும்போது நற்செய்தி மதிப்பீடுகள் வேரூன்ற நல்லதொரு தளம் அமைக்கப்படும் எனவும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எடுத்துரைத்தார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.