2015-10-31 16:02:00

உலகின் மிகப்பெரும் நச்சு நகரம் டில்லி, அண்மை ஆய்வு கூறுகிறது


அக்.,31,2015. உலகிலேயே, மிக அதிக நச்சுத் தன்மையுடன் கூடிய காற்று மாசடைந்த நகரமாக, டில்லி விளங்குகிறது என, பிரிட்டனின், சர்ரே பல்கலைக்கழக ஆய்வுக்குழு தெரிவிக்கிறது.

உலக அளவில், மனிதர்கள் சந்திக்கும், 10 அபாயகரமான விடய‌ங்களில், மாசுபாடுள்ள காற்று, முதலிடத்தில் உள்ளது என்றும், டில்லியில் உள்ள காற்றில், வேறு எந்த நகரத்திலும் இல்லாத அளவிற்கு நுண்ணிய நச்சுப்பொருட்கள் கலந்துள்ளதால், ஆண்டுதோறும் இதன் பாதிப்பால் ஆயிரக்கணக்கானோர் இறக்கின்றனர் எனவும் கூறினார், இந்த ஆய்வில் கலந்து கொண்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, பிரசாந்த் குமார்.

டில்லியை விட, அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள காற்று மண்டலம் அதிக நச்சுடன் காணப்படுகிறது, இதற்கு, அப்பகுதிகளில் பெருகி வரும் தொழிற்சாலைகளும், அவை வெளியிடும் நச்சுப் புகையும் தான் காரணம் எனவும் கூறப்பட்டுள்ளது.

டில்லியை விட, 10 மடங்கு அதிகமான வாகனங்களைக் கொண்டுள்ள‌, சென்னையில்,  காற்றில் கலந்துள்ள நச்சுப் பொருட்களின் அளவு, டில்லியைவிட 10 மடங்கு குறைவு எனவும் கூறும் இந்த ஆய்வின் முடிவுகள்,  சென்னையின் கடற்கரை காற்று, மாசுபாட்டை குறைக்க உதவுகிறது எனவும் தெரிவிக்கிறது. 

டில்லியின் காற்று மாசுக்கேட்டுப் பிரச்னைக்கு  ஓரளவு தீர்வு காண வேண்டுமென்றால், டில்லி சாலைகளின் இரு புறங்களிலும், புல்தரைகளை உருவாக்க வேண்டும்; மரங்களை நட வேண்டும், எனவும் கூறப்பட்டுள்ளது.

2 கோடியே 58 இலட்சம் மக்கள் தொகையைக் கொண்டு, உலகின் ஐந்தாவது பெரிய நகரமமாக விளங்குகிறது டில்லி.

ஆதாரம் : BBC/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.