2015-10-29 16:21:00

நம்பிக்கையின் விதைகளை விதைப்பதாக வானொலி ஒலிபரப்பு உள்ளது


அக்.29,2015. ஒருமைப்பாட்டின் அர்ப்பணத்துடன், விசுவாசத்தின் கனிகளான நம்பிக்கையையும் ஆறுதலையும் தன் நேயர்களுக்கு வழங்கிவரும் ‘ரேடியோ மரியா’ என்ற வானொலி குடும்பத்தினரை தான் நன்றியுடன் நோக்குவதாக தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஏறத்தாழ 70 நாடுகளில் வானொலி மூலம் நற்செய்தி அறிவிப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் ரேடியோ மரியா என்ற குழுவை, இவ்வியாழனன்று காலை திருப்பீடத்தில் சந்தித்து உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தாலியில் துவக்கப்பட்டு, தற்போது பல்வேறு நாடுகளில் பரவியுள்ள இப்பணி, பலவகை மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது குறித்து தன் மகிழ்ச்சியை வெளியிட்டார்.

பல்வேறு கலாச்சரங்களில், மொழிகளில், பாரம்பரியங்களில் எடுத்துச் செல்லப்படும் இந்த நற்செய்தி அறிவிப்புப்பணி, செபத்தின் மீதும் திருஅவை மீதும் மக்களின் அன்பை ஊக்குவிப்பதாக உள்ளது எனவும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ரேடியோ மரியா என்ற இந்த வானொலி, வெறும் செய்திகளையோ, கருத்துக்களையோ, இசையையோ வழங்குவதாக இல்லாமல், மக்களிடையே நம்பிக்கையை விதைப்பதாக உள்ளது எனவும் பாராட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆயிரக்கணக்கான சுயவிருப்பப் பணியாளர்களால் நடத்தப்படும் இந்த வானொலியின் சேவையால், ஒவ்வொரு நாளும் 3 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பயனடைகிறார்கள் என்ற மகிழ்ச்சியையும் வெளியிட்டார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.