2015-10-29 16:38:00

நம்பிக்கை பிறப்பதற்கு, புரிந்துகொள்ளுதல் அவசியம்


அக்.29,2015. தன் அயலாரை அன்புகூராதவரால் இறைவனை அன்புகூர முடியாது, அதுபோல், இறைவனை அன்புகூராதவரால் தன் அயலாரை அன்புகூர இயலாது என்ற வார்த்தைகளுடன், அமைதிக்கான மதங்களின் ஐரோப்பிய அவை அங்கத்தினர்களுக்கு செய்தி அனுப்பியுள்ளார் கர்தினால் Jean Louis Tauran.

'அச்சத்திலிருந்து நம்பிக்கைக்கு : ஐரோப்பாவில் ஒருவர் மற்றவரை வரவேற்றல்' என்ற தலைப்பில், திருத்தந்தையர்களின் கோடை விடுமுறை இல்லம் இருக்கும் காஸ்தல் கந்தோல்ஃபோ நகரில் இடம்பெற்றுவரும் பல்சமய கருத்தரங்கிற்கு செய்தி அனுப்பியுள்ள, பல்சமய உரையாடல் திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் தவ்ரான் அவர்கள், ஒருவர் மீது மற்றவர் நம்பிக்கைக் கொள்ளவேண்டுமெனில், முதலில் அவர்களிடையே புரிந்துகொள்ளுதல் இடம்பெற வேண்டியது அவசியம் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்றைய உலகில் ஒருவர் தன் தனித்தன்மையை இழப்பது குறித்த அச்சம், தீவிர அடிப்படைவாதம், தனக்குள்ளேயே முடங்கிப்போதல், மத, இன சகிப்பற்ற தன்மைகள், மக்கள் கட்டாயமாக குடிபெயர வைக்கப்படல் போன்றவை குறித்தும் தன் செய்தியில் கவலையை வெளியிட்டுள்ளார், கர்தினால் தவ்ரான்.

அச்சத்திலிருந்து நம்பிக்கைக்கும், பாகுபாட்டு நிலைகளிலிருந்து மதிப்பதை நோக்கியும், பகைமையிலிருந்து நட்பை நோக்கியும், பாராமுகத்திலிருந்து ஒருமைப்பாட்டை நோக்கியும், சுயநலத்திலிருந்து பிறர் நலம் நோக்கியும் எவ்வாறு மக்களை வழி நடத்திச் செல்வது என்பது குறித்து மதங்கள் சிந்திக்க வேண்டும் எனவும் கர்தினால் தவ்ரான் அவர்கள், தன் செய்தியில் அழைப்பு விடுத்துள்ளார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.