2015-10-29 14:58:00

கடுகு சிறுத்தாலும் – எதையும் இருமுறை சிந்தித்தால் போதும்


அது ஒரு நீண்ட பாதை. ஓர் இளைஞன் நடந்து வந்துகொண்டிருந்தான். பாதி வழி வந்திருப்பான். மறுபடியும் திரும்பி வந்த வழியிலே நடந்தான். அப்போது எதிரே வந்த பெரியவர் ஒருவர், தம்பி, ஏன் திரும்பி விட்டீர்கள்? என்று கேட்டார். இப்போது தொடர்ந்து போக வேண்டும் என்று எனக்குத் தோன்றவில்லை என்றான் இளைஞன். அப்புறம் ஏன் இவ்வளவு தூரம் நடந்து வந்தீர்கள் என்று பெரியவர் கேட்க, அப்போது போக வேண்டும் என்று தோன்றியது என்றான் இளைஞன். தம்பி, புறப்படும் முன்பே யோசிக்க வேண்டாமா என்று பெரியவர் மீண்டும் கேட்க, பலமுறை யோசித்தேன் என்றான். அதுதான் தம்பி குறை என்று பெரியவர் சொன்னதும் இளைஞனுக்கு விளங்கவில்லை. பின்னர் பெரியவர் விளக்கினார். தம்பி, ஒருமுறை சீன அறிஞர் கன்ஃபூஷியஸ் அவர்களிடம் ஒருவர் வந்து, ஐயா, எங்கள் ஊருக்கு ஒருமுறை நீங்கள் வரவேண்டும் என்றதும், ஏன் என்றார் கன்ஃபூஷியஸ். அங்கே ஒரு சிறந்த சிந்தனையாளர் இருக்கிறார். அவரை நீங்கள் அவசியம் சந்திக்க வேண்டும் என்றார் வந்தவர். சரி. அவர் ஒரு சிறந்த சிந்தனையாளர் என்பது உனக்கு எப்படி தெரியும் என்று கேட்டார் கன்ஃபூஷியஸ். அவர் எதையும் மூன்றுமுறை சிந்திக்கிறார், அதன்பிறகே செய்கிறார் என்றார். அதற்கு கன்ஃபூஷியஸ் அவர்கள், ஒரு காரியத்தை மூன்றுமுறை சிந்திக்கிறவர் அறிவாளி இல்லை, அவர் ஒரு குழப்பவாதி. எதையும் இருமுறை சிந்தித்தாலே போதும். ஒருமுறை அதன் நன்மைகள் பற்றியும், அடுத்தமுறை அதன் தீமைகள் பற்றியும் சிந்தித்தாலே போதும். இதற்குப் பிறகும் ஒருவர் சிந்திக்கிறார் என்றால் அவர் குழம்ப ஆரம்பிக்கிறார் என்று பொருள். பெரியவர் சொன்னதைக் கேட்ட அந்த இளைஞன் சிந்திக்கத் தொடங்கினான்.       .

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.