2015-10-29 16:14:00

இறைவனால் கண்டனம் செய்ய அல்ல, மாறாக, அன்புகூரவே இயலும்


அக்.29,2015. 'இறைவன் எவரையும் கண்டனம் செயவதில்லை, அவரால் அன்புகூர மட்டுமே இயலும், அதுவே நம் வெற்றி' என்பதை மையக் கருத்தாக வைத்து இவ்வியாழன் காலை, சாந்தா மார்த்தா சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில் மறையுரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கடவுளால் அன்புகூரவே முடியும், ஏனெனில் அன்பு என்பது அவரின் பலவீனம், அதுவே நம் வெற்றி என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுள் நம்மோடு இருக்கும்போது யார் நமக்கு எதிராக இருக்கமுடியும் என்ற தூய பவுலின் வார்த்தைகளை எடுத்துரைத்தார்.

நாம் பெற்றுள்ள வெற்றி என்பது, எதிரிகள் மீதோ, பாவத்தின் மீதோ கொண்டதல்ல, மாறாக, இறையன்பில் இணைக்கப்பட்டுள்ள நம்மை அதிலிருந்து எவராலும் பிரிக்க முடியாது என்பதில் கிட்டிய வெற்றி எனவும் உரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இறைவன் நமக்கு வழங்கியுள்ள கொடை என்பது, இயேசுவில் நாம் புதுப்பிறப்பு எடுப்பதாகும் என்பதையும் சுட்டிக்காட்டி, இறையன்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எருசலேமைப் பார்த்து இயேசு கண்ணீர் விட்டு அழுதது, நம் மீது அவர் கொண்டுள்ள அன்பின் வெளிப்பாடாக உள்ளது என்றார்.

தன் குஞ்சுகளை தன் பெரிய இறக்கையின் கீழ் கொண்டுவந்து அடைக்கலம் கொடுக்கும் தாய்க் கோழியைப்போல், இறைவன் நமக்காக காத்திருக்கின்ற போதிலும், எத்தனையோ பேர் அவரை விட்டு விலகிச் செல்கின்றனர், இருப்பினும் அவர் நமக்காக அழுவது மட்டுமல்ல, நம்மை கண்டனம் செய்யாமல் நமக்காக காத்திருப்பதே அவர் கொண்டிருக்கும் அன்பின் உறுதிப்பாடு என மேலும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.