2015-10-29 16:32:00

ஆப்ரிக்க சிங்கங்கள் வேகமாக மறைந்து வருவதாக ஆய்வுத் தகவல்


அக்.29,2015. ஆப்ரிக்காவின் பல பகுதிகளில் சிங்கங்கள் வேகமாக மறைந்து வருகின்றன என்றும், அக்கண்டத்தின் தென் பகுதியில் சில பாதுகாக்கப்பட்ட இடங்களில் மட்டுமே சிங்கங்களின் எண்ணிக்கை பாதுகாக்கப்படுகின்றன எனவும் புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது.

பாதுகாக்கப்படாத இடங்களில், அடுத்த இருபது ஆண்டுகளில் சிங்கங்களின் அளவு, இப்போது இருப்பதில் பாதியாகக் குறையக் கூடும் என அமெரிக்க அறிவியல் பத்திரிகை ஒன்றில் வெளியாகியுள்ள ஆய்வுக் கட்டுரை கூறுகிறது.

மத்திய மற்றும் மேற்கு ஆப்ரிக்காவில், சிங்கங்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தகுந்த அளவுக்கு குறைந்துள்ளது தெரிகிறது எனவும் அந்த ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

பாரம்பரிய மருந்துகளில் சிங்கங்களில் உடல்பகுதிகள் பயன்படுத்தப்படுவது, சிங்கங்களின் வாழ்விட நிலப்பகுதி குறைந்துள்ளது, சட்டவிரோதமாக வேட்டையாடப்படுதல் போன்ற காரணங்களாலேயே அவற்றின் எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்துள்ளன என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆதாரம் :  BBC/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.