2015-10-28 15:46:00

குடிபெயர்வோர், சனநாயகத்தின் தரத்திற்கு உயிருள்ள சான்றுகள்


அக்.28,2015. இன்றைய சமுதாயத்தின் பன்மைக் கலாச்சாரப் பண்பு, மக்கள் மற்றும் கலாச்சாரங்களுக்கு இடையே அமைதியான நல்லிணக்க வாழ்வுக்கு அவசியமான விழுமியங்கள் ஆழப்படுத்தப்பட்டு, உறுதிப்படுத்தப்பட வேண்டியதை வலியுறுத்துகின்றது என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

ஜெனீவாவிலுள்ள ஐ.நா. மற்றும் பிற அனைத்துலக நிறுவனக் கூட்டங்களில், திருப்பீடத்தின் சார்பில் கலந்துகொள்ளும் நிரந்தரப் பார்வையாளர், பேராயர் சில்வானோ தொமாசி அவர்கள், ‘குடிபெயர்வோரும் நகரங்களும்’ என்ற தலைப்பில் அனைத்துலக குடிபெயர்வோர் நிறுவனம் (IOM) நடத்திய கருத்தரங்கில் இச்செவ்வாயன்று உரையாற்றியபோது இவ்வாறு கூறினார்.

குடிபெயர்வோர், சனநாயகத்தின் தரத்திற்கு உயிருள்ள சான்றுகளாய் மாறியுள்ளார்கள் என்றும், குடிபெயர்வோருக்கு ஆதரவான கொள்கைகள், சனநாயகத்தை அடிப்படையாகக் கொண்ட விழுமியங்கள் குறித்து சிந்திப்பதற்கு சிறப்பாக அழைப்பு விடுக்கின்றன என்றும், பேராயர் தொமாசி அவர்கள் கூறினார்.

குடிபெயர்வோர், குடிபெயரும் நகரங்களின் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு வழங்கிவரும் நன்மைகளைச் சுட்டிக்காட்டியுள்ள பேராயர் தொமாசி அவர்கள், குடிபெயர்வோரை ஏற்கும் நாடுகள், அவர்களால் பெறுகின்ற நன்மைகளை, அவர்களுக்குத் திருப்பிக் கொடுக்க வேண்டியதையும் நினைவுபடுத்தினார்.

2014ம் ஆண்டில் உலக மக்களில் 54 விழுக்காட்டுக்கு மேற்பட்டோர் நகரங்களில் வாழ்ந்தனர், இம்மக்களின் எண்ணிக்கை 2050ம் ஆண்டில் இருமடங்காகி, 640 கோடியை எட்டும் என கணக்கிடப்பட்டுள்ளது என்றும் கூறினார் பேராயர் தொமாசி.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.