2015-10-28 15:42:00

அமைதி ஆர்வலர்கள் : 1998ல் நொபெல் அமைதி விருது பாகம் 1


அக்.28,2015. வட அயர்லாந்தில் பிறந்த John Hume, David Trimble ஆகிய இரு அரசியல்வாதிகளுக்கும் 1998ம் ஆண்டின் நொபெல் அமைதி விருது வழங்கப்பட்டது. வட அயர்லாந்தில் ஏறக்குறைய முப்பது ஆண்டுகளாக இடம்பெற்ற சண்டைக்கு அமைதியான வழியில் தீர்வு காண்பதற்கு இவ்விருவரும் எடுத்துக் கொண்ட முயற்சிகளுக்காக இவ்விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. வட அயர்லாந்தில் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நடந்த மோதல்கள், குழப்பங்கள்(The Troubles) என்று அழைக்கப்படுகின்றன. 1968ம் ஆண்டு முதல் 1998ம் ஆண்டுவரை ஏறக்குறைய முப்பது ஆண்டுகளில் வட அயர்லாந்து தெருக்களில் இடம்பெற்ற வன்முறை ஒரு பொதுவான நிகழ்வாக மாறி, அது பிரித்தானியா, அயர்லாந்து குடியரசு, ஏன் ஜிப்ரால்டர்வரைகூட பரவியது.

வட அயர்லாந்து நாடாளுமன்றத்தில் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக ஐக்கிய கட்சியினரின் ஆதிக்கம் இருந்து வந்தது. கத்தோலிக்கருக்கு எதிரான, நிர்வாக அமைப்பு முறையிலான பாகுபாடு போன்ற சமூக மற்றும் அரசியல் தீமைகள் தீரக்கப்படாமலே இருந்தன. இதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகளும் மந்தமாக இருந்தது என்று தேசியவாதிகளும், குடியரசு கட்சியினரும் நினைத்தனர். இந்நிலையால், ஐக்கிய கட்சிக்கும், குடியரசு கட்சிக்கும் இடையே பதட்டநிலைகள் அதிகரித்து வந்தன. 1968ம் ஆண்டு அக்டோபர் 5ம் தேதி வட அயர்லாந்தின் Londonderryல் இடம்பெற்ற குடியுரிமை ஊர்வலமே இச்சண்டைக்கு பிள்ளையார்சுழி போட்டது. பிரித்தானிய அரசின் தலையீட்டால் வட அயர்லாந்தில் சட்டம் ஒழுங்கு மேலும் சீர்குலைந்தது. 1969ம் ஆண்டில் வட அயர்லாந்தின் நிலைமை மேலும் மோசமடைந்ததால், சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்துவதற்கு பிரித்தானியப் படைகள் வட அயர்லாந்துக்கு அனுப்பப்பட்டன. 1972ம் ஆண்டில் நிலைமை இன்னும் அதிகமாக மோசமடைந்ததால், பிரித்தானிய அரசு, வட அயர்லாந்து நாடாளுமன்றத்தை நிறுத்தி வைத்து, வட அயர்லாந்தை பிரித்தானியாவின் நேரடி ஆட்சியின்கீழ் கொண்டு வந்தது.

வட அயர்லாந்தின் ஐக்கிய கட்சியும், பெரும்பான்மை பிரிந்த சபை கிறிஸ்தவர்களும் வட அயர்லாந்து, பிரித்தானியாவுடன் இணைந்திருக்க வேண்டுமென்றும், அங்கிருந்த சிறுபான்மை கத்தோலிக்கரும், குடியரசு கட்சியினரும் வட அயர்லாந்து, அயர்லாந்து குடியரசுடன் இணைந்திருக்க வேண்டுமென்றும் விரும்பியதால் மோதல்கள் தொடர்ந்தன. ஆனால் இச்சண்டை மதம் சார்ந்தது இல்லை, இது நிலப்பகுதிக்காக இடம்பெற்ற சண்டை என்று சொல்லப்படுகின்றது. தேசிய அடையாளத்திற்காகவும், தேசியத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவும் நடைபெற்ற சண்டையாகும். இச்சண்டைக்கு அமைதியான மற்றும் சனநாயக வழியிலே தீர்வு காண வேண்டுமென்றே பொது மக்களும், நிறுவனங்களும் விரும்பி முயற்சி செய்தன. அரசியல் முறையான தீர்வு எளிதாக எட்டமுடியாமலே இருந்தது. இச்சண்டையில் இரு தரப்புகளிலுமே மக்கள் கொலை செய்யப்பட்டனர். இவ்விரு தரப்பிலும் 3,600க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் ஏறக்குறைய ஐம்பதாயிரம் பேர் உடலளவில் மாற்றுத்திறனாளிகளாகினர் மற்றும் காயமடைந்தனர். அதோடு மன அளவிலும் பலர் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.

இவ்வன்முறைகளுக்கு அரசியல் முறைப்படி தீர்வு காண்பதற்கு பல தடவைகள் முயற்சிகள் எடுத்தும் அவை பலனளிக்கவில்லை. ஆயினும், இரு ஆண்டுகள் தொடர் பேச்சுவார்த்தைக்குப் பின்னர், பொது மக்கள் கருத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இறுதியில் 1998ம் ஆண்டு ஏப்ரல் 10ம் தேதியன்று புனித வெள்ளி ஒப்பந்தத்தின்(Good Friday Agreement) வழியாக ஒரு தீர்வு காணப்பட்டது. பெல்பாஸ்ட் ஒப்பந்தம் என்றும் இது அழைக்கப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின் வழியாக வட அயர்லாந்துக்கு அரசியல் அமைப்பு அங்கீகாரம் அளிக்கப்பட்டு அங்கு சுயாட்சி கொண்டுவரப்பட்டது. முப்பது வருடச் சண்டைக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

வட அயர்லாந்தில் முப்பது வருடச் சண்டைக்கு அமைதியான முறையில் தீர்வு காண்பதற்கு உதவிய Good Friday ஒப்பந்தம் உருவாவதற்கு அயரா முயற்சிகள் எடுத்தவர்களில் ஒருவரும், 1998ம் ஆண்டின் நெபெல் அமைதி விருதைப் பகிர்ந்து கொண்டவருமான William David Trimble அவர்கள், 1944ம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதி வட அயர்லாந்தின் பெல்பாஸ்ட் நகரில் பிறந்தவர். பிரித்தானிய அரசியல்வாதியாகிய இவர், வட அயர்லாந்து சுயாட்சி பெற்ற பின்னர் அதன் முதல் அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்படவர். 1998ம் ஆண்டு முதல் 2002ம் ஆண்டுவரை அமைச்சராகப் பணியாற்றிய இவர், UUP என்ற Ulster Unionst கட்சியின் தலைவராக, 1995ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டுவரை பணியாற்றினார். நாடாளுமன்ற மற்றும் சட்டசபை உறுப்பினராகவும் பதவி வகித்த இவர், 2006ம் ஆண்டில் பிரபுக்கள் அவையில் ஆயுள் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 1970களில் பெல்பாஸ்டில் குயின்ஸ் பல்கலைக்கழகத்தில் சட்டக்கல்வி பேராசிரியராகத் தனது வாழ்வைத் தொடங்கினார். அச்சமயத்தில் Vanguard ஐக்கிய முன்னேற்ற கட்சியுடன் இவருக்குத் தொடர்பு ஏற்பட்டது. 1990ம் ஆண்டில் பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணியிலிருந்து விலகினார். முரண்பட்ட கருத்துக்கள் கொண்டிருப்பவரோடு ஒத்திணங்கி வேலை செய்வது பற்றிக் கூறிய David Trimble அவர்கள், முகத்தில் புன்முறுவலுடன் மற்றவர் முன்நின்று அவர்களை ஒரு கப் தேனீர் குடிக்க அழைப்பதே பிரச்சனையான சூழலைக் கையாள்வதற்குச் சிறந்த வழி என்று சொல்லியிருக்கிறார். நாமும், இந்த நொபெல் அமைதி ஆர்வலர் சொல்லியிருப்பது போல, எதிரிகளையும் புன்முறுவலுடன் நோக்கி சூழ்நிலைகளைச் சுமுகமாக்குவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.