2015-10-27 15:21:00

முதுபெரும் தந்தை பர்த்தலோமேயோவுக்கு கவுரவ முனைவர் பட்டம்


அக்.27,2015. இத்தாலியின் சோஃபியா பல்கலைக்கழகத்தில் ஒன்றிப்புக் கலாச்சாரத்திற்காக, கவுரவ முனைவர் பட்டம் பெற்றுள்ள கான்ஸ்டான்டிநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயோ அவர்களுக்கு நல்வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சோஃபியா பல்கலைக்கழகத்தின் வேந்தர் பிளாரன்ஸ் கர்தினால் ஜூசப்பே பெத்தோரி அவர்களுக்கு இவ்வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், என் அன்புக்குரிய சகோதரர் பர்த்தலோமேயோ அவர்களுக்கு இந்தக் கவரவப் பட்டம் வழங்குவதில் தான் மிகவும் மகிழ்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒன்றிப்புக் கலாச்சாரத்திற்காக வழங்கப்படும் கவுரவ முனைவர் பட்டம், சரியான ஒரு நபருக்கே வழங்கப்பட்டுள்ளது என்றும், நம் கிறிஸ்தவ சபைகள் ஒன்றிப்பை நோக்கி பொதுவான பயணம் மேற்கொள்வதற்கு முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயோ அவர்கள், மிகுந்த அர்ப்பணம் மற்றும் விடா உறுதியுடன் முயற்சித்து வருகிறார் என்றும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஃபோக்கோலாரே பக்த இயக்கத்தை ஆரம்பித்த கியாரா லூபிச் அவர்களின் தூண்டுதலால் இத்தாலியின் சோஃபியா பல்கலைக்கழக நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.  இந்நிறுவனத்தில் ஒன்றிப்புக் கலாச்சாரத்திற்காக வழங்கப்படும் முதல் கவுரவ முனைவர் பட்டம் இதுவேயாகும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.